புதுடெல்லி: “எனது முடிவுகள் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தால் வழிநடத்தப்படுகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி பிரதமராக பதவியேற்று இன்றுடன் (மே 30) 9 ஆண்டுகள் நிறைவடைவதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”இந்த நாட்டிற்கான சேவையில் இன்று நாம் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். பணி மற்றும் நன்றியுணர்வால் நான் நிறைந்திருக்கிறேன். எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும், அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தால் வழிநடத்தப்பட்டுள்ளது. வளர்ந்த இந்தியாவை உருவாக்க இன்னும் கடினமாக நாம் உழைப்போம்” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிரதமர் மோடியின் 9 ஆண்டுகள் ஆட்சி நிறைவை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமையில் இருந்து ஒரு மாதம் நீண்ட பிரச்சாரமாக கொண்டாட பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி புதன் கிழமை ராஜஸ்தானில் நடைபெற உள்ள பிரச்சார பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
‘தேசமே பிரதானம்’என்ற தாரக மந்திரத்துடன் எல்லாத துறைகளிலும் இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அக்கட்சியின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள் நாடுவ்தழுவிய அளவில் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து திங்கள்கிழமை அவர்கள் எடுத்துரைத்தனர்.
நரேந்திர மோடி, முதல் முறையாக 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். 2019-ம் ஆண்டு மே 30-ம் தேதி இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.
Today, as we complete 9 years in service to the nation, I am filled with humility and gratitude. Every decision made, every action taken, has been guided by the desire to improve the lives of people. We will keep working even harder to build a developed India. #9YearsOfSeva
— Narendra Modi (@narendramodi) May 30, 2023