ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி மகேந்திர சிங் தோனி மற்றும் அணியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், வலுவாக இருக்கக் கூடிய தோற்றம் இருந்தாலும், கடைசி வரை வெற்றி பெறுவார்கள் என்ற தோற்றம் இருந்தாலும் நின்று வெற்றி பெற முடியும். ஏற்கனவே பல குஜராத்திகளை வெற்றி கண்டிருக்கிறோம். இது தொடரும் என டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டிருந்ததாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, சி.எஸ்.கே அணியின் வெற்றிக்கான ரன்னை அடித்தது பாஜக காரியகர்த்தா. ஜடேஜா பாஜக காரியகர்த்தா. அவரது மனைவி பாஜக எம்.எல்.ஏ. ஜடேஜா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். சி.எஸ்.கே வெற்றி பெற்றதற்கு தமிழனாக பெருமைப் படுகிறேன். அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழர்கள் அதிகம் இருந்தார்கள். அதையும் கொண்டாட வேண்டும். 96 ரன் அடித்த தமிழர் சாய் சுதர்சன். சி.எஸ்.கே அணியில் ஒரு தமிழர் கூட ஆடவில்லை. இருந்தாலும் நாம் அந்த அணியை கொண்டாடுகிறோம். காரணம் தோனிக்காக. கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தது பாஜக காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இதே தான் தமிழகத்தில் 2024ஆம் ஆண்டிலும் நடக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.