புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “நாடாளுமன்றம் என்பது நாட்டு மக்களின் குரல் ஆகும். ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முடிசூடும் விழா போல பிரதமர் மோடி கருதுகிறார்” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ட்விட்டர் பதிவில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது, அவ்விழாவுக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அழைக்கவில்லை. இப்போது புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான, உயர் வகுப்பினருக்கு ஆதரவான மனநிலையைக் கொண்டதாக உள்ளது. அதனால்தான் நாட்டின் உயர் அரசியல் சாசன பதவிக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை’’ என்று கூறியுள்ளார்.