பெங்களூரு:
திப்பு சுல்தான்
கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது மண்டியா மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் அப்போது மந்திரியாக இருந்த அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது திப்பு சுல்தானை தாக்கி கொன்றதை போல், சித்தராமையாவையும் கொலை செய்ய வேண்டும் என்று அஸ்வத் நாராயண் பேசி இருந்தார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மைசூரு தேவராஜா போலீஸ் நிலையத்தில், அஸ்வத் நாராயண் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அப்போது அந்த புகாரை போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால், அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த வழக்கு மண்டியா புறநகர் போலீசாருக்கு மாற்றப்பட்டது.
விசாரணைக்கு இடைக்கால தடை
இதற்கிடையே தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கு அரசியல் பழிவாங்கும் செயல் என கூறி, அதை ரத்து செய்ய வேண்டும் என அஸ்வத் நாராயண் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையை நேற்று முன்தினம் நடத்த நீதிபதி நாகபிரசன்னா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி அமர்வில் நடைபெறும் என கூறப்பட்டது.
அதன்படி விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். இதையடுத்து நீதிபதி, சித்தராமையா குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசிய விவகாரத்தில் முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். அதாவது அஸ்வத் நாராயண் மீதான வழக்கு விசாரணைக்கு 4 வாரங்களுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிபதியின் இந்த உத்தரவால், அஸ்வத் நாராயண் சற்று நிம்மதி அடைந்துள்ளார்.