சென்னை: குஜராத் அணிக்கு எதிரான பைனலில் சிஎஸ்கே வென்ற நிலையில் தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த சீசன் தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. அல்லது தோனி கேப்டனாக ஆடும் கடைசி சீசனாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த முறையே குவாலிபயர் போட்டியில், குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் சொன்ன தோனி.. அதை பற்றி எல்லாம் முடிவு செய்ய 8-9 மாதங்கள் உள்ளன. இப்போது ஏன் அந்த தலைவலியை பற்றி யோசிக்க வேண்டும். இடையில் சிறிய ஐபிஎல் ஏலம் உள்ளது. அதனால் பார்க்கலாம். விளையாடும் வீரராகவோ அல்லது நிர்வாகியாகவோ சிஎஸ்கே அணியுடன்தான் எப்போதும் இருப்பேன், என்று தோனி கூறியுள்ளார்.
தோனி தனது பேச்சில் சிஎஸ்கே அணியில் நிர்வாகியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கூறியுள்ளார். அணியில் இதனால் தோனி நிர்வாகியாக தொடர போகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நேற்று ஓய்வு குறித்த கேள்விக்கு தோனி வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை. அதை பற்றி பேசாமல் மழுப்பலாக பதில் அளித்தார். அதில், சூழ்நிலைபடி பார்த்தால் இதுதான் நான் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம். ஆனால் நான் ரசிகர்களிடம் பெறக்கூடிய அன்பை பார்த்தால்.. அதை சொல்வதை விட நன்றி என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
எல்லோருக்கும் நன்றி. அடுத்த 9 மாதம் கஷ்டப்பட்டு நான் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியுமா என்று யோசிக்கிறேன். 1 சீசனுக்காக மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா என்று நினைக்கிறேன். என் உடல் உள்ளிட்ட பல விஷயங்களை வைத்துதான் நான் அந்த முடிவை எடுக்க முடியும். 6-7 மாதங்கள் அதற்கு உள்ளன. சென்னை மக்கள் முன்னிலையில் மீண்டும் சென்னையில் ஆட வேண்டும் என்றுதான் இருக்கிறது. பார்க்கலாம், என்று தோனி கூறியுள்ளார்.
கேப்டன் யார்? : இந்த நிலையில்தான் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற போவதாக பேச்சுக்கள் சுற்றி வரும் நிலையில்தான் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பது தொடர்பான ஆலோசனைகள், விவாதங்கள் எழுந்துள்ளன.
அதன்படி சிஎஸ்கே அணியிடம் சில திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணிக்கு நீண்ட கால கேப்டன் இருக்கும் விதமாக இளம் வீரரை கேப்டனாக கொண்டு வர திட்டங்கள் இருக்கிறதாம். ஆனால் அதற்கு முன் ஒரு டிரான்சிஷன் கேப்டன் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக சிஎஸ்கே தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அடுத்த சீசனில் தோனி சாதாரண வீரராக ஆடுவார். ஒரு டிரான்சிஷன் கேப்டன் இருப்பார்.
அதற்கு அடுத்த சீசனில் நிரந்தர கேப்டன் தேர்வு செய்யப்படுவார். டிரான்சிஷன் கேப்டன் பதவிக்கு ரஹானே தேர்வாக வாய்ப்பு உள்ளது. இவரை அணியில் எடுத்ததும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததும் இதனால்தான்.
அவர் சையது முஷ்டாக் தொடரில் சிறப்பாக கேப்டன்சி செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் டிரான்சிஷன் கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இல்லையென்றால் ஜடேஜாவை கேப்டனாக்கும் வாய்ப்புகளும் உள்ளன. முக்கியமாக கடந்த குவாலிபயர் போட்டி முடிந்ததும் ஜடேஜாவிடம் சிஎஸ்கே இயக்குனர் காசி சென்று நீண்ட நேரம் பேசினார்.
அணியில் மூத்தவர் என்பதால் தோனிக்கு அடுத்தபடியாக ஜடேஜா கேப்டன் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இல்லையென்றால் சிஎஸ்கே அணி ருத்துராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்க பயிற்சி வழங்கும் என்று கூறப்படுகிறது. ருத்து கேப்டன் ஆகும் பட்சத்தில் அதற்கு முன் டிரான்சிஷன் கேப்டனாக ரஹானே இருப்பார். அடுத்த வருடம் தோனி அணியில் இருப்பார். கேப்டனாக இல்லாமல் ஆலோசகராக ரஹானேவிற்கு ஆலோசனை வழங்குவார், கெய்க்வாட்டிற்கு பயிற்சி கொடுப்பார்.
ஜடேஜாவை வைத்து செய்யப்பட்ட கேப்டன்சி முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. அதனால் அவருக்கு கேப்டன்சி வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற கேள்வி உள்ளது.