விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே உள்ள அணிச்சகுப்பம் மீனவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் விமல். இவர், பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். வழக்கம்போல, இன்று காலையும் அவரது ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, பொம்மையார்பாளையம் அருகே அவரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, தாங்கள் மறைத்து வைத்திருந்த அறிவால் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது.
பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமலை பார்த்து அப்பகுதி மக்கள், கோட்டக்குப்பம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து பார்த்தபோது விமல் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. அவரது உடலை மீட்ட போலீஸார், உடற்கூறாவிற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கோட்டக்குப்பம் போலீஸார், பல்வேறு சந்தேக கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமலின் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு சில வருடங்களுக்கு முன்பாக நிலம் சார்ந்த பிரச்னை இருந்து வந்ததாம். அதில் தொடர்புடைய நபர்களை விமலின் அண்ணன் வினோத் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரோதத்தில், 2019-ம் ஆண்டு வினோத் கொலை செய்யப்பட்டாராம். இந்த விரோதம் நீடித்து வந்த நிலையில், தற்போது விமல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், விமலின் அண்ணன் வினோத், ஒரு ரெளடி தரப்பை சேர்ந்தவராக கூறப்படுகிறது. இது தொடர்பான ஒரு பிரச்னையில் 2019-ல் வினோத் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பழி தீர்க்கும் வகையில் அடுத்த வருடமே எதிர் தரப்பு ரெளடி கொலை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த முன்விரோதின் தொடர்ச்சியாக தற்போது வினோத்தின் சகோதரர் விமலும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற மற்றொரு கருத்தும் நிலவி வருகிறது.
இந்த கொலை சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான 6 பேரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. விசாரணையின் முடிவிலேயே கொலைக்கான முழுக் காரணம் தெரியவரும்.!