கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தத சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள் தரப்பில் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி ஜூலை 17ம் தேதி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் திடீரென கலவரம் வெடித்து பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளிகளில் பொருட்கள் சூறையாடப்பட்டது. இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாணவி உயிரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு காவல்துறையினரின் விசாரணை இருந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில் கடந்த மே 15ம் தேதி சிபிசிஐடி 1,152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த குற்றப்பத்திரிக்கையில் மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. தற்கொலைக்கான முகாந்திரமே உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீமதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் கீர்த்திகா, 2வது நபர் ஹரி பிரியா ஆகிய 2 ஆசிரியர்கள் வழக்கில் இருந்து நீக்கி விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை இருந்தால் வரும் ஜூன் 5ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி தெரிவித்துள்ளார்.