ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு ஒராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத நகர்ப்புற நல வாழ்வு மையம், சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறி உள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் இலவச அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சோதனை, தாய் சேய் சுகாதார சேவைகள் மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளுக்காக குடியிருப்புகளுக்கு அருகில் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 22-வது வார்டு இடையபொட்டல் தெருவில் பொதுமக்களின் வசதிக்காக நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைப்பதற்கு 2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய நிதி குழு மானிய நிதியில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக இடையபொட்டல் தெருவில் உள்ள நகராட்சி சுகாதார வளாகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டது.
இந்நிலையில் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஓராண்டாகியும் நல வாழ்வு மையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் நலவாழ்வு மையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, அதன் உள்ளே மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது. மக்களின் சுகாதாரத்தை பேணுவதற்காக தொடங்கப்பட்ட நல வாழ்வு மையம், ஒதுக்கப்பட்ட இடமாக மாறியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, ‘குடியிருப்புகளுக்கு அருகே இருக்க வேண்டும் என்பதற்காக தான் நல வாழ்வு மையம் என்கிற திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இங்கு சுகாதார வளாகம் அருகே ஒதுக்கப்புறமான இடத்தில் அமைந்ததால், நல வாழ்வு மையம் இருப்பதே பலருக்கு தெரியவில்லை. பணிகள் முடிந்த நிலையில் இன்னும் திறப்பு விழா கூட வைக்கவில்லை. நகராட்சி நிர்வாகம் சுகாதார துறையிடம் கட்டிடத்தை ஒப்படைக்காததால், மருத்துவர்கள் உட்பட எந்த பணியாளர்களும் வருவதில்லை’ என்றனர்.