புதுடில்லி :தமிழகம், புதுச்சேரி உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 150 மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரம் பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளின் தரத்தை ஆய்வு செய்யும் பணியை தேசிய மருத்துவ கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இந்த கமிஷனுக்கு உட்பட்ட, இளநிலை மருத்துவ கல்வி வாரியம், நாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளின் தரம் குறித்து கடந்த ஒரு மாதமாக ஆய்வு மேற்கொண்டது.
அதில், பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில் கண்காணிப்பு கேமரா, ஆதாருடன் இணைக்கப்பட்ட விரல் கைரேகை வருகை பதிவு வசதிகளில் குறைபாடு இருப்பது தெரியவந்தது. மேலும், பல கல்லுாரிகளில் போதிய எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லாததும் தெரிய வந்தது.
இதையடுத்து, குறைபாடுகளுடன் விதிகளுக்கு உட்படாமல் செயல்பட்டு வரும் 150 கல்லுாரிகளின் அங்கீகாரத்தை பறிக்க, தேசிய மருத்துவ கமிஷன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கல்லுாரிகள் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, குஜராத், அசாம், பஞ்சாப், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.
அங்கீகாரம் இழக்கும் கல்லுாரிகள், 30 நாட்களுக்குள் தேசிய மருத்துவ கமிஷனில் மேல்முறையீடு செய்ய முடியும்.
முறையீடு நிராகரிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகம் மத்திய சுகாதாரத்துறையை அணுகவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement