புதுடெல்லி: தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் போட வந்த மல்யுத்த வீராங்கனைகளிடம் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுக்கு 5 நாட்கள் அவகாசம் கெடு விதிக்குமாறு அவர்கள் கூறியதை அடுத்து, கங்கை நதியில் பதக்கங்களை வீசும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், தங்களிடம் பாலியல் ரீதியில் அத்துமீறி செயல்பட்டதாக சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக, புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட கடந்த 28-ம் தேதி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் பேரணி செல்ல முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்கள் போராடி வந்த இடத்தையும் அப்புறப்படுத்தினர். இனி, அங்கு போராட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள சாக்ஷி மாலிக், “மல்யுத்தப் போட்டிகளில் நாட்டிற்காக பங்கேற்று நாங்கள் வென்ற பதக்கங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் எங்கள் பதக்கங்களை யாரிடம் திருப்பிக் கொடுக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவரான திரவுபதி முர்முவிடம் கொடுக்கலாம் என்றால், அவர் நாங்கள் போராடிய போது அமைதியாகவே இருந்தார். அவரும் ஒரு பெண்தான். நாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில்தான் அவரது வசிப்பிடம் உள்ளது. நடப்பது என்ன என்று தெரிந்தும் அவர் எதுவும் சொல்லவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியிடம் பதக்கங்களை ஒப்படைக்கலாம் என்றால், நாங்கள் பதக்கம் பெற்று நாடு திரும்பியபோது அவர் எங்களை தனது வீட்டின் மகள்கள் என்றார். ஆனால், ஒருமுறைகூட அவர் தனது வீட்டு மகள்களை எண்ணிப் பார்க்கவில்லை. மாறாக, எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டார். பிரகாசமான வெள்ளை உடையில் அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். இதை நினைக்கும்போது, அது எங்களை வாட்டுகிறது.
இந்த நாட்டின் நிர்வாக அமைப்பின் எங்களுக்கான இடம் எங்குள்ளது? இந்தியாவின் மகள்களுக்கான இடம் எங்கே? எல்லாம் வெறும் கோஷம்தானா? தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திதானா? இந்த அமைப்பு எல்லாவற்றையும் பிரச்சாரமாகவே செய்கிறது. எங்களை சுரண்டுகிறது. நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினால், எங்களை சிறையில் தள்ள இந்த நிர்வாக அமைப்பு ஏற்பாடு செய்கிறது.
எனவே, நாங்கள் எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு கங்கை நதியில் இட உள்ளோம். ஏனெனில், கங்கா தாயைப் போன்றவள். நாங்கள் வென்ற பதக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் புனிதமானது. அதனை சரியான இடத்தில் ஒப்படைக்க விரும்புகிறோம். எனவே, கங்கை அன்னையிடம் சமர்ப்பிக்க உள்ளோம். எங்களை ஒடுக்க நினைப்பவருக்கு சாதகமாக செயல்படும் புனிதமற்ற நிர்வாக அமைப்பைப் போன்றது அல்ல கங்கை” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை கங்கையில் போடுவதற்காக ஹரித்துவார் சென்றனர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. தாங்கள் பெற்ற பதக்கங்களை கையில் வைத்துக்கொண்டு வீராங்கனைகள் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த காட்சிகள் வெளியாகின.
தொடர்ந்து பதக்கங்களை கங்கை நதியில் வீசிய ஏறிய வந்த மல்யுத்த வீரர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகாயித், குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு 5 நாட்கள் அவகாசம் கொடுங்கள் என்று கூறி, பின்பு வீராங்கனைகளிடம் இருந்து பதக்கங்களை வாங்கினார். அவர்களும் ஒப்புக்கொண்டு, இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இதனிடையே, டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா கேட் பகுதி போராட்டம் நடத்தும் இடம் கிடையாது என்றும், எனவே அவர்களை அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
பின்புலம்: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ளவர் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர், இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் தொடங்கினர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர், பிரிஜ் பூஷண் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது, வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அவர்களை டெல்லி போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி அவர்கள் செல்ல முயன்றதால், போலீஸாருக்கும், வீரர், வீராங்கனைகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை பேருந்தில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.
இதுகுறித்து டெல்லி சிறப்பு காவல் ஆணையர் (சட்டம் – ஒழுங்கு) தீபேந்திர பதக் கூறும்போது, “சட்டம் – ஒழுங்கை மீறியதற்காக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதன் தொடர்ச்சியாக, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லி போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.