மூணாறு:அரிசி கொம்பன் யானையால் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பீதியுடன் வசித்த இரண்டு ஊராட்சிகளைச் சேர்ந்த பொது மக்கள் கடந்த ஒரு மாதமாக நிம்மதி அடைந்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் நடமாடிய அரிசி கொம்பன் ஆண் காட்டு யானை உயிர் பலி உட்பட பலசேதங்களை ஏற்படுத்தியது.
இங்கு 2005 முதல் காட்டு யானைகளிடம் சிக்கி 34 பேர் பலியான நிலையில் அரிசி கொம்பன் மட்டும் 7 பேரை கொன்றதாக வனத்துறையினர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் கூறியிருந்தனர்.
அந்த ஊராட்சிகளில் அரிசி கொம்பன், சக்கை கொம்பன் (பலாப்பழம் கொம்பன்), முறிவாலன் (முறிந்த வால்) என மூன்று ஆண் காட்டு யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தின. அவற்றை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஜன.,31ல் வனத்துறை அமைச்சர் சசீந்திரன் தலைமையில் இடுக்கி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தபோதும், அவற்றில் மிகவும் ஆபத்தானதாக கருதப்பட்ட அரிசி கொம்பனை மட்டும் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முன்வந்தனர். அதன்படி ஏப்.,29ல் அரிசி கொம்பனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனத்தில் விட்டனர்.
அந்த யானை மூன்று நாட்களாக தேனி மாவட்டம் கம்பம் உட்பட சுற்றிலும் உள்ள பகுதிகளில் கலங்கடித்து வருகிறது.
அதேசமயம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பீதியுடன் வசித்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நிம்மதியடைந்தனர்.
அரிசி கொம்பன் ரேஷன் கடை, வீடு ஆகியவற்றை குறிவைத்து சேதப்படுத்தி அரிசியை தின்பது வழக்கம். அது போன்று பூப்பாறை அருகே பன்னியாறு எஸ்டேட்டில் ஆண்டனி நடத்தி வரும் ரேஷன் கடையை 10 ஆண்டுகளில் 11 முறை சேதப்படுத்தி அரிசியை தின்றது. கடந்த ஜனவரி முதல் ஏப்.29 வரை 5 முறை சேதப்படுத்தியது. அதனால் இரவில் ரேஷன் கடையை காவல் காத்த நிலையில், அப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதால் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி கூறுகையில், அரிசி கொம்பன் இடம் பெயர்ந்ததால் இரண்டு ஊராட்சிகளிலும் காட்டு யானை தொந்தரவு சற்று குறைந்தது. எனினும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த இயலாததால் வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக உள்ளனர், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement