வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் தொடரின் பைனலில், சுப்மன் கில்லை வெறும் 0.1 வினாடியில் பந்தை பிடித்து ‘ஸ்டம்பிங்’ செய்தார் சென்னை அணி கேப்டன் தோனி. இதுவே உலகில் மின்னல் வேக ‘ஸ்டம்பிங்’காக பார்க்கப்படுகிறது.
பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் நேற்றுடன் (மே 29) முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற பைனலில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 214 ரன்கள் எடுத்தது. பின்னர் மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டதால் சென்னை அணிக்கு 15 ஓவரில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய சென்னை வீரர்கள் கடைசி இரு பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்து சென்னை அணியின் ஜடேஜா, வெற்றியை வசமாக்கினார். சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதித்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில்லை, ஜடேஜாவின் பந்தில் தோனி ‘ஸ்டம்பிங்’ முறையில் அவுட்டாக்கினார். இந்த விக்கெட் தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது, சுப்மன் கில் பந்தை அடிக்காமல் தவறவிட, தோனி அந்த பந்தை பிடித்த 0.1 வினாடியிலேயே மின்னல் வேகத்தில் ‘ஸ்டம்பிங்’ செய்திருப்பார். அவுட் ஆனதை நடுவர்களிடம் சத்தமாக கூட முறையிடாமல், தான் செய்த ஸ்டம்பிங்கின் மீது நம்பிக்கை வைத்து, விக்கெட் வீழ்த்தியதை ஜடேஜா உடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார் தோனி. இதுவே உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக ஸ்டம்பிங்காக பார்க்கப்படுகிறது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement