புதுடில்லி, புதுடில்லியில், பொது மக்கள் முன்னிலையில், 16 வயது சிறுமியை, அவரது காதலன் 22 முறை குத்திக் கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் புதுடில்லியின், ஷாபாத் டெய்ரி பகுதியில் வசித்து வந்த, 16 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த, சாஹில், 20, என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நண்பர் மகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க சிறுமி சென்றார். அப்போது, பின்தொடர்ந்து வந்த சாஹில், அவரிடம் வாக்குவாதம் செய்தார்.
இதில் ஆத்திரமடைந்த சாஹில், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியை, 20க்கும் மேற்பட்ட முறை குத்தினார். இதில் நிலைகுலைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
எனினும், கோபம் தீராத சாஹில், அருகிலிருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின், சாஹில் தலைமறைவானார்.
இது தொடர்பான நிகழ்வுகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.
இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதில், சிறுமியை சாஹில் தாக்கிய போது, அந்த வழியே சென்ற பொது மக்கள் கண்டும் காணாதது போல் சென்றது, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி வழக்குப் பதிந்த போலீசார், உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் தலைமறைவான சாஹிலை கைது செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஆம் ஆத்மி தலைவரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ”சட்டம் – ஒழுங்கு துணை நிலை கவர்னரிடம் உள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக ஏதாவது செய்யுங்கள்,” என தெரிவித்துள்ளார்.
புதுடில்லி மகளிர் கமிஷனும் இந்த கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்