சென்னை:
இனி பிளஸ் 2 பொதுத்தேர்வை போலவே அனைத்து கல்லூரிகளிலும் ஒரே நாளில் தேர்வு நடத்தப்பட்டு ஒரே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநில கல்விக்கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 19 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பொன்முடி கூறியதாவது:
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு சமயங்களில் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் தனித்தனியாக அறிவிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையானது, மாணவர்கள் கல்லூரி மாறும் போது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. ஒரு பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே வேறு பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. இதனால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை தவிர்ப்பதற்காக இனி வரும் காலங்களில் அனைத்து பல்கலைக்கழங்களிலும் தேர்வு முடிவுகளை ஒரே நாளில் வெளியிட முடிவு செய்துள்ளோம். பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வை போல அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நாளில் தேர்வு நடைபெறும். ஒரே நாளில் முடிவு வெளியிடப்படும். அதேபோல, ஒரே நாளில் முதுநிலை உயர்கல்வி சேர்க்கை நடத்தப்படும்.
இவையனைத்தும் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதேபோல, மொழிப்பாடங்களை பொறுத்தவரை அனைத்து பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும். இவ்வாறு பொன்முடி கூறினார்.