சென்னை: அந்த இசையமைப்பாளருக்கே சரியான சம்பளத்தை கொடுக்க முடியாமல் தவித்து வரும் அந்த தயாரிப்பு நிறுவனம் எப்படி அந்த மாஸ் நடிகருக்கு இத்தனை கோடி சம்பளம் கொடுக்கிறது என விசாரித்து பார்த்தால் வழக்கம் போல எல்லாமே அவருடைய காசு தான் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
உச்ச நடிகர் முதல் பல முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களை தாங்களே இன்னொருத்தர் பெயரில் தயாரிப்பது வழக்கமான ஒன்றாகவே மாறி விட்டது.
இளம் ஹீரோக்களே அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வரும் நிலையில், இன்னமும் நம்பியார் காலத்து டெக்னிக்கைத் தான் அந்த மாஸ் ஹீரோ பயன்படுத்தி வருகிறாராம்.
அதிக சம்பளம்: தனது பணத்தை வைத்தே படங்களை தயாரித்துக் கொண்டு நடித்து வருகிறாராம் அந்த மாஸ் நடிகர். இதில், தனக்கு அதிக சம்பளத்தை மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் கொடுப்பதாக அந்த தகவலையும் அவரே லீக் செய்து விட்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவரது படத்தை தயாரிக்க முன் வந்தால், பெரிய தொகையை கேட்க வசதியாக இருக்குமே என்பதால் இப்படியொரு ஐடியாவை அமல்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.
அந்த தயாரிப்பு நிறுவனமாவது: பெரிய தொகையில் படங்களை தயாரிக்கவோ இசையமைப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரிய சம்பளத்தை கொடுக்கவே தயங்கும் அந்த தயாரிப்பு நிறுவனமா ஹீரோவுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளத்தை தூக்கி கொடுத்து விடப் போகுது என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
வெறும் பில்டப்: 1000 கோடி வசூல் செய்த படங்களில் நடித்த நடிகர்களே பெரிய சம்பளத்தை வாங்காமல் அமைதி காத்து வரும் நிலையில், 200 கோடியை தாண்டி படங்கள் வசூல் செய்யாத நிலையில், அந்த நடிகருக்கு யாராவது அத்தனை பெரிய சம்பளத்தை தருவார்களா? என சினிமா வட்டாரத்தில் சில பிரபலங்களே பகிரங்கமாக கலாய்த்து பேசி வருவதாக கூறுகின்றனர்.
இப்படித்தான் ஏற்றினாரா: ஒவ்வொரு முறையும் படங்கள் ஓடுதோ இல்லை ஃபிளாப் ஆகுதோ அதை பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தனது சம்பளத்தை மட்டும் நடிகர் உயர்த்திக் கொண்டே செல்வதற்கு காரணமே இதுபோன்ற தில்லாலங்கடி வேலை தான் என்றும் சிறு நிறுவனத்தை வைத்து தனது பணத்தில் ஒரு படத்தை தயாரித்து விட்டு, அதன் பின்னர் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் படம் பண்ணவும் அத்தனை பெரிய தொகையை கேட்டு வாங்கி வருகிறார் அந்த நடிகர் என்கிற பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.