மஸ்கட்: இந்திய பெண் ஒருவரை ஏமாற்றி கடத்தி ஓமன் நாட்டிற்கு 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக வீடியோ வெளியான நிலையில், அந்த பெண்ணை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மீட்டுள்ள நிலையில், அவர் 25 முதல் 30 பெண்கள் அமர்தசரஸ் நகரில் இருந்து ஓமனுக்கு கடத்தி விற்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், வாழ்வில் வறுமையை வெல்வதற்காக வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்ய தயராக உள்ளார்கள். அவர்களை குறிவைத்து கடத்தி ஓமனில் உள்ள பணக்கார வீடுகளுக்கு விற்பனை செய்யும் மனித மிருகங்கள் இயங்கி வருகிறார்கள்.
அப்படிப்பட்ட மனித மிருகங்கள் வீசும் வலையில் சிக்கி ஏராளமான பெண்கள் ஓமன், கத்தார் போன்ற நாட்டுகளுக்கு கடத்தப்பட்டு அடிமை போல் பயன்படுத்தப்படுவதும் நடக்கிறது. வெறும் 80 ஆயிரம் தொடங்கி 1.5 லட்சம் வரை கொடுத்து பெண்களை வாங்கும் பணக்கார முதலாளிகள் தங்களின் அடிமை போல் பெண்களை நடத்துகிறார்கள்.
வெளிநாடுகளில் பெண்கள் வீட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால, சட்டப்பூர்வமாக அரசின் அங்கீகாரம் பற்ற ஏஜென்சிகள் அல்லது அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக மட்டுமே செல்ல வேண்டும். அப்படி செல்லும் பெண்களுக்கு பணி பாதுகாப்பு, வேலை உத்திரவாதம், டாச்சர் இல்லாத பணிகள், மதிப்புமிக்க ஊதியம் போன்றவை கிடைக்கும்.
ஆனால் இதுகுறித்து சரியான புரிதல்கள் இல்லாமல் ஆட்களை கடத்தி விற்கும் ஏஜெண்டுகளிடம் சிக்கும் பெண்கள் வெளிநாடுகளில் சித்ரவதையை அனுபவிக்கிறார்கள். அப்படி சித்ரவதை அனுபவித்த இந்திய பெண் ஒருவரின் வீடியோ அண்மையில் வெளியானது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த அந்த பெண் என்னை தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று கதறிபடி வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்திய தூதரகம் மூலம் அந்த பெண் ஓமனில் மீட்கப்பட்டார்.
ஓமன் நாட்டின் மஸ்கட்டில் சொந்த உறவினர்களால் வெறும் 80 ஆயிரத்திற்கு கடத்தப்பட்ட அந்த பெண், 2 மாதங்கள் பிணைக் கைதி போல் நடத்தப்பட்டிருக்கிறார். அதன்பின்னர் வெளியுறவு அமைச்சகத்தால் மீட்கப்பட்டார்.
இந்நிலையில் அந்த பெண் ஊடகத்திடம் கூறும் போது, அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தரைச் சேர்ந்த குறைந்தது 25-30 பெண்கள் இன்னும் தன்னை போல் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். சுமார் ரூ.80,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை அந்த பெண்கள் விற்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறினார். இதனிடையே மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்த விவகாரம் குறித்து அளித்த பதிலில் ஒரு முகாமில் 30 முதல் 40 பெண்கள் இந்தியாவிற்கு திரும்ப காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
இந்திய பெண்கள் ஓமனுக்கு கடத்தப்படுவது எப்படி? ஏழை இந்திய பெண்கள், கூலிவேலைக்கு ஓமனுக்கு சுற்றுலா விசாவில் செல்கிறார்கள். அங்கு சுற்றுலா விசாவில் சென்ற பெண், அவர்களின் விசாவை இரண்டு வருடங்களுக்கு நீடிக்கிறார்கள். இதற்காக 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பிடிக்கிறார்கள். இந்நிலையில் வீட்டு வேலைக்கு நல்ல வேலை தருவதாக ஓமனின் மஸ்கட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள், அங்கு வெறும் 80 ஆயிரம் முதல் 1.50 லட்சத்திற்கு ஓமனைச் சேர்நத்வர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறார்கள். அப்படி விற்கப்பட்ட பெண்களை, ஓமனில் பாலியல் தொழில் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் . பாலியல் தொழில் செய்ய மறுக்கும் பெண்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இதுதான் நடக்கிறது. அரபு நாடுகளில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று இந்தியாவில் போலியாக கம்பெனியை ஆரம்பிக்கும் சிலர், அதன் மூலம் தான் இதுபோன்ற வேலைகளை செய்கிறார்கள்.
2022ம் ஆண்டு கணக்குப்படி, இது போல் கடத்தப்பட்ட இந்திய பெண்களின் எண்ணிக்கை 6222 என்று இந்திய தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே 80 லட்சம் இந்தியர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வெளிநாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 3லட்சத்து 13 ஆயிரத்து 962 பேர் 1976ம் ஆண்டு முதல் அடிமைகளாக இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.