நியூயார்க்:
“நமது பிரதமர் நரேந்திர மோடியை கடவுள் அருகே கொண்டு சென்று அமர வைத்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை கடவுளுக்கே விளக்கம் அளிப்பார்” என அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
கர்நாடகா தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தோடு அமெரிக்காவுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. முதல் நாளான இன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். ராகுல் காந்தி பேசியதாவது:
இந்த உலகம் என்பது மிகப்பெரியது. உலகில் உள்ள அனைத்து விஷயங்களும் தனக்கு தெரியும் என்று நிச்சயமாக யாராலும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு பல மர்மங்களையும், அதிசயங்களையும் கொண்டதுதான் நமது உலகம். ஆனால் சில பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும் என தங்களுக்கு தாங்களே நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு உயிரினம்தான் நமது பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடியை நீங்கள் கடவுளுக்கு அருகே சென்று உட்கார வைத்து பாருங்கள். இந்த உலகம் எப்படி இயங்குகிறது, பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை கடவுளுக்கே அவர் சொல்லிக் கொடுப்பார். அதை கேட்டு, தான் என்ன படைத்தேன் என கடவுளே குழம்பி விடுவார். அந்த அளவுக்கு திறமையானவர் நரேந்திர மோடி.
இதுபோன்ற நபர்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கே வரலாறு கற்றுக் கொடுப்பார்கள். விஞ்ஞானிகளுக்கே அறிவியல் பாடம் எடுப்பார்கள். ராணுவத்தினருக்கே போர் முறைகளை பற்றி விளக்கம் அளிப்பார்கள். ஆனால் இதில் பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால், எந்தவொரு விஷயத்தையும் கேட்கவோ, கற்கவோ இவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஒவ்வொரு வெளிநாட்டு பயணங்களின் போதும் இந்தியாவை அவமானப்படுத்தி பேசுவதை ராகுல் காந்தி வழக்கமாக வைத்துள்ளார். பிரதமர் மோடியை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு இந்தியாவை அவர் தரக்குறைவாக பேசி வருகிறார்.
மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவருக்கு மற்ற நாடுகளின் தலைவர்கள் கொடுக்கும் மரியாதையை பார்த்து ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் அவர் இவ்வாறு பேசி வருகிறார்” என அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.