கூட்டுறவுத் துறை மூலம் உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்பு முறை: ஐஎம்சி குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: கூட்டுறவுத் துறை சார்பில் உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்பு முறைத் திட்டத்தை எளிதில் செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (ஐஎம்சி) அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி அதன் மூலமாக கூட்டுறவுத் துறை சார்பில் உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்பு முறைத் திட்டத்தை எளிதில் செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (ஐஎம்சி) அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (மே 31) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தொழில்முறையில் இத்திட்டத்தை குறித்த காலத்திலும், சீரான முறையிலும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, கூட்டுறவு அமைச்சகம், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தும். குறைந்தது 10 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக தொடக்கத்தில் இத்திட்டத்திலிருந்து பெறப்படும் அனுபவங்களின் மூலமாக, நாடு தழுவிய அளவில் இத்திட்டத்தை விரிவாக செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படும்.

திட்ட அமலாக்கம்: கூட்டுறவுத் துறை அமைச்சர் தலைமையில், வேளாண் அமைச்சர், நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர், உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு குழு அமைக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில், கிடங்குகள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த நோக்கங்களுக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) செயல்படுத்தப்படும்.

அந்தந்த அமைச்சகங்களால் அடையாளம் காணப்பட்ட திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் கீழ் ஒருங்கிணைத்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் கீழ் பின்வரும் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:

> வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்:

  • வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் (ஏஐஎஃப்),
  • வேளாண் சந்தைப்படுத்துதல் உள்கட்டமைப்புத் திட்டம் (ஏஎம்ஐ),
  • ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் (எம்ஐடிஎச்)
  • வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் (SMAM)

> உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்:

  • பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் திட்டத்தை முறைப்படுத்துதல் (பிஎம்எஃப்எம்இ)
  • பிரதமரின் கடல்சார் வேளாண் மேம்பாட்டுத்திட்டம் (பிஎம்கேஎஸ்ஒய்)

> நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்:

  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் ஒதுக்கீடு
  • குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் நடவடிக்கைகள்

திட்டத்தின் நன்மைகள்: இந்தத் திட்டம் பல அம்சங்களைக் கொண்டது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் நிலையில், கிடங்குகளை நிறுவுவதன் மூலம் நாட்டில் உணவு தானிய சேமிப்பு உள்கட்டமைப்புப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே சமயம், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கீழ்க்கண்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்:

  • மாநில முகமைகள்/ இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) ஆகியவற்றின் கொள்முதல் மையங்களாக செயல்படும்.
  • நியாயவிலைக் கடைகளாக (எஃப்பிஎஸ்) செயல்படுதல்;
  • தனித்தன்மையுடன் கூடிய வாடகை மையங்களை அமைத்தல்;
  • வேளாண் விளைபொருட்களை மதிப்பிடுதல், வரிசைப்படுத்துதல், தரம் பிரித்தல் உள்ளிட்ட பொதுவான பதப்படுத்தும் பிரிவுகளை அமைத்தல்.
  • மேலும், உள்ளூர் அளவில் பரவலான சேமிப்புத் திறனை உருவாக்குவதன் மூலம் உணவு தானியம் வீணாவதைக் குறைத்து நாட்டின் உணவுப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்.
  • விவசாயிகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், விவசாயிகளின் இன்னல்கள் குறைந்து அவர்கள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த விலையைப் பெற முடியும்.
  • இத்திட்டம், உணவு தானியங்களை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கும், மீண்டும் கிடங்குகளிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கும் ஆகும் செலவை வெகுவாகக் குறைக்கும்.
  • அரசின் முழுமையான அணுகுமுறையின் மூலம், இத்திட்டம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்துவதால், அவற்றின் வணிக நடவடிக்கைகள் பன்முகப்படுத்தப்படும். இதனால் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
  • கால வரையறை மற்றும் செயல்படுத்தும் முறை
  • அமைச்சரவை ஒப்புதல் அளித்த ஒரு வாரத்திற்குள் தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்.
  • அமைச்சரவை ஒப்புதல் அளித்த 15 நாட்களுக்குள் அமலாக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்.
  • மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 45 நாட்களுக்குள் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை இணைப்பதற்கான ஒரு இணையதளம் தொடங்கப்படும்.
  • அமைச்சரவை ஒப்புதல் அளித்த 45 நாட்களுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணி தொடங்கும்.

பின்னணி: கூட்டுறவுச் சங்கங்களின் வலிமையைப் பயன்படுத்தி, அவற்றை வெற்றிகரமான மற்றும் துடிப்பான வணிக நிறுவனங்களாக மாற்றுவதற்கும், கூட்டுறவு மூலம் செழிப்பை உருவாக்குதல் (சகார்-சே-சம்ரிதி) என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமாகும். இந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்காக, கூட்டுறவு அமைச்சகம் கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

கிடங்கு, தேவைக்கேற்ற வாடகை மையம், பதப்படுத்தும் அலகுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் உள்கட்டமைப்பை அமைப்பது இந்த திட்டத்தில் அடங்கும். தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் நிலையில், அவை பல்நோக்கு சங்கங்களாக மாற்றப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் நிலையில் உள்கட்டமைப்பை உருவாக்குவதும், நவீனமயமாக்குவதும், போதுமான சேமிப்பு திறனை உருவாக்குவதன் மூலமாகவும் உணவு தானியங்கள் வீணாவது குறைக்கப்படும். நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தி விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு சிறந்த விலையைப் பெறவும் இது உதவும்.

நாடு முழுவதும் 1,00,000-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) 13 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயம் மற்றும் கிராமப்புறங்களின் பங்கை நிர்ணயிப்பதில் அடித்தள அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டு இந்த சங்கங்களின், செயல்பாடுகளை, மேலும் பல்வேறு நிலைகளுக்கு கொண்டு செல்லவும், பிற வேளாண் உள்கட்டமைப்புகளுடன் பரவலாக்கப்பட்ட சேமிப்பு திறனை அமைக்கவும், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதோடு மட்டுமல்லாமல், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை மிகவும் துடிப்பான பொருளாதார நிறுவனங்களாக மாற்றுவதற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.