தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்து ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா. புரோட்டா மாஸ்டராக பணிபுரியும் இவரது வீட்டில் கடந்த வாரம் வெள்ளை நிறத்தில் ஒரு காகம் தஞ்சம் அடைந்தது.
தினமும் காலையில் பறவைகளுக்கு உணவு வழங்கும் காட்டுராஜா கடந்த 24 -ம் தேதியன்று காலையில் பறவைகளுக்கு உணவு வைத்தபோது வெள்ளை நிற காகம் அதில் இருப்பதை பார்த்துள்ளார். மற்ற பறவைகளிலிருந்து அந்த காகம் தனித்து இருந்தது.
புரோட்டா மாஸ்டர் வழங்கும் உணவினை வெள்ளை காகம் சாப்பிட்டு அவரது வீட்டை சுற்றி சுற்றியே வந்தது. இந்த தகவல் வேகமாக பரவ அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.
உண்மையில் வெள்ளை நிற காகம் உண்டா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. நேரில் சென்று பார்த்த மக்கள் ‘உண்மையிலேயே வெள்ளை நிற காக்கா இருந்தது. நாங்கள் பார்த்தோம்.. அது காகம் போலவே கரைந்தது’ என்று கூறினார்கள். அந்த காகத்தின் வீடியோவை காட்டினார்கள். ஆச்சரியமாக இருந்தது.
இந்த வெள்ளை நிற காகம் குறித்து சூழலியல் ஆய்வாளர் கோவை சதாசிவத்திடம் கேட்டோம். அவர் கூறுகையில், “நாம் காணக்கூடிய காக்கை வகைகளில் மொத்தத்தில் இரண்டு இனங்களே உண்டு.
ஒன்று சம்பல் நிற கழுத்து கொண்ட காக்கை. இது பொதுவாக நாம் எல்லோருமே பார்க்க கூடிய காக்காதான்.
இரண்டாவது வனகாக்கை. இது உடல் முழுவதும் நல்ல கறுப்பு நிறத்தில் இருக்கும். அண்டங் காக்கா என்று கூறுவார்கள்.
வெள்ளை நிறத்தில் இந்த காக்கை இருப்பதற்கு காரணம் நிற பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுதான்.
சில மனிதர்களுக்கு நிற பிறழ்வு நோய் ஏற்பட்டு தலை முடி முதல் கால்வரை முழுவதும் வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். அதேபோலத்தான் காக்கைக்கும் நிற பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளை நிறத்தில் இப்படி காணப்படுகிறது.
இந்த நோய் பாதிக்கப்பட்ட காகத்தை மற்ற காகங்கள் சேர்த்துக் கொள்ளாது. இதனால் இணை சேர முடியாது. மற்ற காகங்களுடன் சுமூகமாக சேர்ந்து வாழ முடியாது. அதனால் தனிமையில்தான் வாழும். மற்றபடி வெள்ளை நிற காக்கா என்று ஒரு இனம் கிடையாது” என்றார்.