ஆக்ரா: சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தவருக்கு மதுரா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. போக்சோ வழக்கில் 15 நாட்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனை கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து மதுரா போலீஸார் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் உள்ள கடையில் கணக்காளராகப் பணியாற்றும் முகமது சயீப் (26) என்பவர், சிறுவனை அழைத்துச் செல்வது தெரியவந்தது. சயீபிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
சம்பவத்தன்று சிறுவனை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்ற முகமது சயீப், தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை கொடூரத்தை பெற்றோரிடம் சிறுவன் கூறிவிடுவான் என்ற அச்சத்தில் அவனை கழுத்தை நெரித்து சயீப் கொலை செய்துள்ளார். பின்னர் அங்குள்ள கால்வாயில் சிறுவனின் உடலை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் முகமது சயீப் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு மதுரா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ராம் கிஷோர் யாதவ் 15 நாட்களில் தீர்ப்பு வழங்கினார். முகமது சயீப் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.