ராய்ப்பூர்: செல்போனை கண்டுபிடிக்க அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்ட சத்தீஸ்கர் அரசு அதிகாரிக்கு ரூ.53,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மநிலம், கான்கெர் மாவட்டம், கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில் கெர்கட்டா-பரல்கோட் அணைக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள தடுப்பணையில் செல்பி புகைப் படம் எடுத்தபோது அவரது செல்போன் தண்ணீரில் தவறி விழுந்தது. அந்த செல்போனின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
அரசு அதிகாரி என்ற வகையில் தனது செல்வாக்கை பயன்படுத்திய ராஜேஷ் விஸ்வாஸ், நீர்ப்பாசன துறை அதிகாரிகளின் உதவியுடன் தடுப்பணையில் இருந்து 42 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றினார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவரது செல்போன் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததால் ராஜேஷ் விஸ்வாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில் அவருக்கு உறுதுணையாக இருந்த அணையின் பொறுப்பு அதிகாரி ஆர்.கே.தீவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சத்தீஸ்கர் அரசின் இந்திராவதி திட்ட தலைமை பொறியாளர், கெர்கட்டா- பரல்கோட் அணையின் பொறுப்பு அதிகாரி ஆர்.கே.தீவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உங்களது வாய்மொழி உத்தரவு மூலம் தடுப்பணையில் இருந்து மோட்டார் பம்புகள் தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.
சுமார் 4 நாட்கள் 42 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை வீணாக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த தண்ணீரின் மூலம் 1,500 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி வழங்கியிருக்க முடியும்.
கோடை காலத்தில் கால்நடைகள் இந்த தண்ணீரை அருந்தி தாகத்தை தீர்த்திருக்க முடியும். பொறுப்பற்ற வகையில் செயல்பட்டதற்காக உங்களுக்கு ரூ.53,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகை உங்களது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.