அலகாபாத்: வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் இந்து பெண்கள் வழிபாட்டு உரிமை கோரும் மனுவை விசாரிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான முஸ்லிம் தரப்பான அஞ்சுமன் மஸ்ஜித் கமிட்டி மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
உத்தரப்பிரதெச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே உள்ளது ஞானவாபி மசூதி. இம்மசூதி வளாக சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலையை வழிபட அனுமதி கோரி 5 இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். முதலில் வாரணாசி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கள ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம்கள் தரப்பான அஞ்சுமன் மஸ்ஜித் கமிட்டி மனுத் தாக்கல் செய்தது. ஆனால், வாரணாசி நீதிமன்றமே வழக்கை விசாரிப்பது குறித்து முடிவு எடுக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்திய வாரணாசி நீதிமன்றம் கடந்த ஆண்டு, சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி பெண்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது என கூறி முஸ்லிம் தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்தது.
வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை முஸ்லிம் தரப்பு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்ற தனிநீதிபதி முனிர், இந்து பெண்கள் வழிபாட்டு உரிமை கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது என்ற வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான முஸ்லிம்கள் தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை இந்து பெண்கள் தரப்பு வரவேற்றுள்ளது.