சென்னை:
தமிழக பாஜக ஒரு பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் படுதோல்வி, மாநில விவகாரங்கள் உள்ளிட்ட விஷயங்களில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைமையை மாற்றுவதற்கான பேச்சுகள் கூட டெல்லியில் அரசல் புரசலாக அடிபடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா தேர்தல் தோல்விக்கு பிறகு தென் மாநிலங்களில் இதுவரை காட்டி வந்த முகத்தை டெல்லி பாஜக தலைமை மாற்றி இருக்கிறது. குறிப்பாக, பாஜக தேசிய பொதுச்செயலாளராக இருந்த பி.எல். சந்தோஷுக்கு இதுவரை கொடுத்து வந்த முக்கியத்துவத்தை டெல்லி மேலிடம் குறைத்திருக்கிறது.
கர்நாடகா தேர்தலை முழுக்க முழுக்க பி.எல். சந்தோஷிடம்தான் பாஜக தலைமை ஒப்படைத்தது. ஆனால் வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் அவர் எடுத்த தவறான முடிவுகள்தான் கர்நாடகா தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என பாஜக தலைமை உணர்ந்துள்ளது.
இதனால் பிரமதர் மோடியும், அமித் ஷாவும் பி.எல். சந்தோஷை ஓரம்கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால வெற்றியை தென் மாநிலங்களில் கொண்டாடும் விழா கமிட்டி தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறாராம். நியாயமாக, தென் மாநில பாஜக ஒருங்கிணைப்பாளராக உள்ள பி.எல். சந்தோஷ் தான் விழா கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் மீதான அதிருப்தியே பொன். ராதாகிருஷ்ணனுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கான காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல, பி.எல். சந்தோஷால் கட்சிக்குள் கொண்டு வரப்பட்ட அண்ணாமலை, சி.டி. ரவி உள்ளிட்டோரையும் டெல்லி மேலிடம் சற்று விலக்கி வைக்க தொடங்கி இருக்கிறது. அதனால்தான், தமிழக அரசியலில் முன்பு போல அண்ணாமலை ஆக்டிவ் காட்டுவதில்லை எனவும் சொல்லப்படுகிறது. மேலும், கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வருவதை கூட அண்ணாமலை வெகுவாக குறைத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் கட்சிப் பணிகள், நிர்வாகிகள் நியமனம் – நீக்கம், குறைகேட்பு என அனைத்தும் அப்படியே முடங்கிக் கிடப்பதாக கட்சி சீனியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அண்ணாமலையின் இந்த செயல்பாடுகள் தொடர்பாக டெல்லிக்கு புகார்கள் சென்று கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமிழக பாஜகவில் தலைமையில் மாற்றம் வரும் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை, அப்படி நடந்தால் தமிழக பாஜக தலைவராக வருவதற்கு பொன். ராதாகிருஷ்ணன், கோவை எம்எல்ஏ
ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படலாம் என டெல்லிக்கு நெருக்கமான பாஜக சீனியர் தலைவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். இந்த இருவரில் வானதி சீனிவாசனுக்கு கட்சியில் நிறைய ஆதரவு இருப்பதால் அவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.