ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 திருடர்களை பிடித்து, அவர்களிடம் இருந்து 24 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர். இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
ராமநாதபுரம் புளிக்காரத்தெருவைச் சேர்ந்த மல்லம்மாள் காளி கோயில் பூசாரி மனோகரன் வீட்டில் மே 14-ம் தேதி மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள், வெள்ளிப்பொருட்களை வீட்டை உடைத்து திருடிச்சென்றனர். இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கேணிக்கரை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில், சார்பு ஆய்வாளர் தினேஷ்பாபு, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் அய்யனார், பாலமுருகன் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையினர் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மே 30-ம் தேதி (நேற்று) ஏர்வாடி பகுதியில் தங்கியிருந்த திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்த தமிழ்வேந்தன் மகன் முருகானந்தம்(35), சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த குமார் மகன் ஹரிபிரசாத்(33) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் பூசாரி மனோகரன் வீடு, மே 25-ம் தேதி ராமநாதபுரம் ராணிசத்திரத் தெருவில் 2 வீடுகள், கீழக்கரையில் ஒரு வீடு ஆகியவற்றில் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர், மதுரை பகுதிகளில் நகை,பணத்தை திருடியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 24 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ. 30 ஆயிரம் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடுகள், நகை அளவீடு செய்யக்கூடிய டிஜிட்டல் எடை இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. முருகானந்தம் மற்றும் ஹரிபிரசாத் ஆகிய இருவர் மீதும் கோயமுத்தூர், ஈரோடு, கரூர், மதுரை, சென்னை, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என போலீஸார் தெரிவித்தனர்.
கேணிக்கரை காவல்நிலையத்தில் மீட்கப்பட்ட நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, டிஎஸ்பி ராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.