தர்மபுரியில் மாயமான ஏழாயிரம் நெல் மூட்டைகள் – உரிய நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்.!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட ஏழாயிரம் நெல்மூட்டைகள் மாயமானதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அதன் அடிப்படையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சோதனை செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள் நெல்மூட்டைகள் மாயமானதை உறுதி செய்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தகவலை மறுக்கும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், ஏழாயிரம் நெல் மூட்டைகள் இருக்கின்றன என்பதையும் உறுதி செய்ய இயலவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை மிகவும் அலட்சியமாக திறந்தவெளியில் உள்ள குடோனில் சேமித்து வைத்தது மட்டுமின்றி அவற்றை பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகிறது.
7 ஆயிரம் நெல் மூட்டைகள் உண்மையிலேயே காணாமல் போனதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முதலமைச்சர் உரிய விசாரணை நடத்த உத்தரவிடவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்” பதிவிட்டுள்ளார்.