அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு சென்று இருந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சிங்கப்பூர், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும் பொருளாதார இறுதியாகவும் தொழில் ரீதியாகவும் நல்லுறவு பெறக்கூடிய வகையில் பயணம் அமைந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற திட்டங்களில் ஜப்பானின் பங்கு இடம் பெற்றுள்ளது. உற்பத்தி துறையில் உலகிற்கே முன்னோடியாக விளங்குவது ஜப்பான் நாடு. அதேபோன்று ஆசியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பது திமுக அரசின் குறிக்கோள்.
இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்த்திடக்கூடிய வகையில் ஏற்கனவே தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்கள் ஜப்பானுக்கு சென்று ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தினார். குறைந்தபட்சம் 3000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க வேண்டுமென திட்டமிட்டு செயல்பட்டோம். ஆனால் மொத்தமாக 3,233 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது மட்டுமில்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டிற்கும், தொழிற்கல்வி வளர்ச்சிக்கும், உயர் கல்வி திறன் பயிற்சிக்கு தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அடுத்த கட்ட தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் தூண்டுகோலாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் சிங்கப்பூரிலும், ஜப்பானின் டோக்கியோ நகரத்திலும் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் துவங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பதை எடுத்துரைத்தேன்.
இந்த சந்திப்பின்போது சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மேலும் சில நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முனைப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது. எனவே மேலும் சில நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்திட அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தொழில் துறை அமைச்சரையும், தொழில்துறை அலுவலர்களையும் நான் வலியுறுத்தி உள்ளேன். இதனை ஒட்டி வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன்.
இந்த அழைப்பை ஏற்று பல பெருந்தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர். எனவே இந்த மாநாட்டை நம்முடைய தமிழக அரசு சிறப்பாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.