தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? இந்திய வானிலை மையம் பரபரப்பு தகவல்!

தென்மேற்கு பருவ மழையின் மூலம் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் நல்ல மழை பொழிவை பெறும். தென் இந்திய மாநிலங்கள், வட இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் என்பதால் இந்த மழை மீதான எதிர்பார்ப்பு எப்போதும் அதிகம்தான். அதோடு கோடைக்காலத்தை ஓட்டி தொடங்கும் பருவமழை என்பதும் இதன் கூடுதல் சிறப்பு.

ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் பெய்யும் இந்த மழை அதிகளவு நீர்த்தேவையை பூர்த்தி செய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை எப்போது தொடங்கும் என்ற தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தென்மேற்கு பருவமழை அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் வங்காள விரிகுடாவின் சில பகுதிகளிலும், மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி பகுதிகளிலும் மேலும் முன்னேற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு இந்தியா முழுவதும் உருவாகும் ஒரு புதிய வெப்ப மண்டல புயல் வியாழக் கிழமை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த வெப்ப மண்டல புயலால் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் இமாச்சலப் பிரதேசத்தில் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் ஆலங்கட்டி மழையும் பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வரை ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ராஜஸ்தானில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லி, கிழக்கு டெல்லி, புதுடெல்லி, வடக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி, தென்மேற்கு டெல்லியில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வெப்ப மண்டல புயலால் அடுத்த ஐந்து நாட்களில் கேரளா, லட்சத்தீவுகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் புதன் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.