கடந்த 2020-ம் ஆண்டில், ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தியது கொரோனா வைரஸ். கொரோனா தொற்றுப்பரவலுக்குப் பின், பொதுமக்களுக்கு பல சுகாதார நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டன. அதன்படி, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கட்டாயம் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், சுகாதாரத்துறை நடவடிக்கைகள், தடுப்பூசி கண்டுபிடிப்பு போன்ற காரணங்களால் கொரோனா தொற்றின் பரவல் கட்டுக்குள் வந்தது. இதன் காரணமாக தற்போது சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற எதுவும் கட்டாயம் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
எனினும், சிலர் முகக்கவசம் அணிவதைப் பார்க்கிறோம். வெளியில் செல்லும் நேரங்களைத் தவிர்த்து மணிக்கணக்காவும் சிலர் முகக்கவசம் போட்டுக்கொள்கின்றனர். இவ்வாறு எந்த நேரமும் முகக்கவசம் அணிவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையை அறிய, யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வெங்கடேஷ்வரன் மற்றும் தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதனிடம் ஆகியோரிடம் பேசினோம்.
மருத்துவர் வெங்கடேஷ்வரன் கூறுகையில், “முகக்கவசம் அணிவது நல்லதுதான். முகக்கவசம் அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி ஒருபோதும் குறையாது. தூசியிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். காற்று மூலம் பரவும் நோய்களைக் கூட இதன் மூலம் தடுக்க முடியும். முகக்கவசம் அணிவதால் மூச்சுத்திணறல் ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்று சொல்வதெல்லாம் நாமே நினைத்துக் கொள்வதுதான். முகக்கவசம் அணிவதால் சளி, இருமல், காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அலர்ஜி, புகையினால் வரக்கூடிய புற்றுநோயைக்கூட ஓரளவு தடுக்க முடியும்” என்றார்.
மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறும்போது, “முகக்கவசம் அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது. இப்படி நினைப்பதே தவறான கண்ணோட்டம். மருத்துவர்கள் காலம் காலமாக 16 -18 மணிநேரம் முகக்கவசம் அணிந்துதான் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எப்போதோ குறைந்திருக்க வேண்டும். எனவே, முகக்கவசம் அணிந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதெல்லாம் உண்மையல்ல” என்றார்.
ஜப்பான் போன்ற நாடுகளில், கொரோனாவுக்கு முன்பிருந்தே முகக்கவசம் அணிவது அவர்களது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதா?
“ஜப்பான், கொரியா மக்களுக்கு முகக்கவசம் அணிவது அவர்களது கலாசாரத்தில் ஒன்றாகிவிட்டது. அவர்கள் எப்போது இந்தியாவிற்கு வந்தாலும் முகக்கவசம் அணிவதைப் பார்க்க முடியும். தங்களது உடல் குறித்த பாதுகாப்பில் ரொம்பவே அக்கறையுடன் இருப்பவர்கள். அவர்களுக்கு இதுவரை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாகவும் எந்த சான்றும் இல்லை”.
கொரோனாவின் அடுத்த அலை வரக்கூடும்… தயாராக இருக்குமாறு, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதே?
“கொரோனாவின் அடுத்த அலை எப்போது வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே உண்டான கொரோனா பாதிப்பின்போது ஏராளமானோர் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பு இருந்து, தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்களுக்கு நிச்சயம் எதிர்ப்பு சக்தி இருக்கும்.
மேலும் எல்லோரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. கொரோனா மட்டுமன்றி பன்றிக் காய்ச்சல், இன்ஃப்ளுயென்ஸா போன்ற வைரஸ் பாதிப்புகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள இது உதவும்” என்றார்.