அஜ்மீர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் மற்றும் லோக் சபா தேர்தலையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் ஒரு மாத கால பான்-இந்தியா பிரச்சாரமான ‘மஹா ஜன்சம்பர்க்’-ஐ பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தொடங்கிவைத்தார்.
இதில் பேசிய பிரதமர் மோடி, “ஒன்பது ஆண்டுகால பாஜக அரசு நாட்டு மக்களுக்கு சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலன் ஆகியவற்றிற்காக அர்ப்பணித்துள்ளது. 2014க்கு முன், நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. காங்கிரஸ் அரசு எல்லையில் சாலைகள் அமைக்க பயந்தது. எனினும், 2014ல் உங்களின் ஒரு வாக்கு மூலம் அனைத்தையும் மாற்றிவிட்டீர்கள். இப்போது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது.
உங்கள் வாக்கு மூலம் 2014-ல் மத்தியில் நிலையான அரசாங்கத்தை உருவாக்கினீர்கள். உங்கள் ஆணையை பாஜக மதித்தது. ஆனால் நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கினீர்கள். பதிலுக்கு ராஜஸ்தானுக்கு என்ன கிடைத்தது?. உறுதியற்ற தன்மை மற்றும் அராஜகம். கடந்த ஐந்தாண்டுகளாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முதல்வர் ஆகியோர் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் மும்முரமாக உள்ளனர்.
உத்தரவாதம் கொடுக்கும் பழக்கம் காங்கிரசுக்கு ஒன்றும் புதிதல்ல. பழையதுதான். 50 ஆண்டுகளுக்கு முன், ‘கரிபி ஹட்டாவோ’ என்கிற உத்தரவாதத்தை காங்கிரஸ் அளித்தது. காங்கிரஸின் கொள்கை ஏழைகளை ஏமாற்றி அவர்களை கஷ்டப்படுத்துவதுதான். இதனால் ராஜஸ்தான் மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தடுப்பூசி கவரேஜ் ஏறக்குறைய 60% ஆக இருந்தது. அப்போது, 100 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளில் 40 பேருக்கு உயிர்காக்கும் தடுப்பூசிகள் போட முடியவில்லை. இப்போது காங்கிரஸ் அரசு இருந்திருந்தால், 100% தடுப்பூசி போட இன்னும் 40 ஆண்டுகள் ஆகியிருக்கும். அதற்குள் பல தலைமுறைகள் கடந்திருக்கும். உயிர்காக்கும் தடுப்பூசிகள் இல்லாததால் இறந்த ஏழை பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?.
துணிச்சலான இந்த மண்ணை காங்கிரஸ் எப்போதும் ஏமாற்றி வருகிறது. 4 தசாப்தங்களாக, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற பெயரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. பாஜக அரசு ஓஆர்ஓபியை அமல்படுத்தியது மட்டுமின்றி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிலுவைத் தொகையும் வழங்கியது.
நமது நாட்டில் வளர்ச்சிப் பணிகளுக்குப் பணப் பற்றாக்குறை இருந்ததில்லை… ஒவ்வொரு திட்டத்திலும் 85% கமிசன் எடுக்கும் கட்சி காங்கிரஸ். இதனை சரிசெய்ய முடிந்ததால் எங்களால் வளர்ச்சியை கொண்டுவர முடிந்தது.
கொள்ளை என்று வரும்போது, காங்கிரஸ் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் உட்பட ஒவ்வொரு குடிமகனையும் அது சூறையாடி உள்ளது.
இந்தியாவின் சாதனைகள், இந்திய மக்களின் வெற்றியை ஒரு சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியாவுக்கு புதிய பார்லிமென்ட் கட்டிடம் கிடைத்ததில் உங்களுக்கு பெருமை இல்லையா?. ஆனால், காங்கிரஸும் அதைப்போல் வேறு சில கட்சிகளும் இதில் சேற்றை அள்ளி வீசினார்கள். 60,000 தொழிலாளர்களின் கடின உழைப்பையும் தேசிய உணர்வுகளையும் காங்கிரஸ் அவமதித்துள்ளது. தலைமுறைக்கு ஒருமுறை இதுபோன்ற வாய்ப்புகள் வந்தாலும், ஏழைகளின் மகன் தனது வம்ச அரசியலுக்கு சவால் விட்டதால் காங்கிரஸ் கோபமடைந்தது. ஏழைகளின் மகன் ஏன் ஊழலை கேள்வி கேட்கிறான் என்று காங்கிரஸார் கோபப்படுகிறார்கள்?” என்று தெரிவித்துள்ளார்.” என்று பேசினார்.