நில பிரச்சனையை தீர்ப்பதாக பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் கைது.!
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த 10-ந் தேதி சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், கொரட்டூரில் தனக்கு 78 சென்ட் பூர்வீக சொத்து உள்ளது. இதனை விற்பதற்காக நண்பர் சதீஷ் மற்றும் தரகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரை அணுகினேன்.
ஆனால், இந்த நிலத்தை விற்பது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தது. இதனால், அந்த சிக்கலைத் தீர்த்து வைத்து இடத்தை விற்று கொடுப்பதற்காக கமிஷன் அடிப்படையில் பா.ஜ.க நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் என்பவரை அணுகினோம்.
அப்போது, வேறு ஒருவர் மூலம் ரூ.5 கோடிக்கு நிலம் விற்பனை செய்யப்பட்டதைத் தெரிந்து கொண்ட ரமேஷ், தனது கூட்டாளியான மகேஷ் என்பவருடன் வீட்டிற்கு வந்து என்னிடமிருந்த ரூ.45 லட்சத்தை பறித்து சென்றார்.
அதுமட்டுமல்லாமல், இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். எனவே இந்த சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று தரகர் பிரகாஷ் ராஜும் கடந்த 18-ந் தேதி கொரட்டூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த இரண்டு புகாரின் படி, கொரட்டூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று அதிகாலை மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேசை கைது செய்தனர்.