கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டிகே சிவகுமாருக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
டிகே சிவக்குமார் அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக, பெங்களூருவில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டமான, மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. மேலும் வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.
டிகே சிவகுமாரின் இந்த பெட்டிக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் தெரிவிக்கையில், “பதவி ஏற்றவுடன் சிவக்குமார் வேறு பணிகளை செய்வார் என்று நினைத்தேன். இப்படி பேசுவார் என்று நினைக்கவில்லை.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று அவர் தெரிவித்து இருப்பதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்.
சிவகுமாரின் இந்த பேச்சு மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.