சென்னை:
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, அரசு கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பஸ் பாஸ் விநியோகிக்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துறை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் திறப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கோடை வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருப்பதால் இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அரசியல் கட்சிகள் தெரிவித்து வந்தன.
மேலும், பெரும்பாலான பெற்றோர்களும் இதே கருத்தை தெரிவித்ததால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜூன் 7-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இதனிடையே, அரசு பள்ளிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ ஆகிய கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான பணியில் சற்று தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பஸ் பாஸ்கள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்படுவதுதான் காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த ‘ஸ்மார்ட் பஸ் பாஸ்’ அச்சடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எனினும், பள்ளி, கல்லூரிகள் திறந்தவுடனேயே பஸ் பாஸ்களை வழங்குவது முடியாத காரியம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை மாத இறுதியில் தான் பஸ் பாஸ்களை வழங்க முடியும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தான், அடுத்த அறிவிப்பு வரும் வரை அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது என அரசு பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், சீருடை அணிந்து வரும் அரசு பள்ளி மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது. அவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதேபோல, அடையாள அட்டை வைத்திருக்கும் அரசு கல்லூரி மாணவர்களிடமும் பஸ் பாஸ் கேட்கக்கூடாது. சீருடை அணிந்திருக்கும் அல்லது அடையாள அட்டையை வைத்திருக்கும் மாணவர்களை பஸ் பாஸ் இல்லை எனக் கூறி பேருந்தி இருந்து இறக்கிவிடும் சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.