பிச்சாவரம் படகு சவாரி அனுபவம்! – சுற்றுலாக் கதைகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

வருடத்திற்கு ஒருமுறை, நீங்கள் இதுவரை சென்றிராத இடத்திற்குச் செல்லுங்கள் – தலாய் லாமா

பயணம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல. மனிதன் தோன்றிய காலத்திலேயே பயணமும் தொடங்கியது எனலாம். வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் உணவு தேடிக் காடு மேடெல்லாம் அலைந்தான். பிற்கால மனிதன் திரைகடலோடியும் திரவியம் தேடினான். இன்றைய மனிதன் இன்பம், இறைத்தேடல், பொழுதுபோக்கு, அறிவு வளர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பயணமே சுற்றுலா எனலாம் -முனைவர் ஆரோக்கிய தனராஜ்

பயணம் பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே கவர்ச்சியானது. – பால் தெரூக்ஸ்

Boating

“போட்டிங்’ டிக்கெட் வாங்கினதும் ஃபோன் பண்ணு, வரேன்…!”

தன்னுடன் வந்த அனைவரையும் படகுப்பதிவகதுக்கு அனுப்பினேன்.

கார்பார்க்கிங் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், நட்டநடுவிலிருக்கும் மண்டபத்தைச் சுற்றிலும் போடப்பட்டுள்ள பெஞ்சுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன்.

சுற்றுமுற்றும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

“இப்படியே இந்த மண்டபத்துல உட்கார்ந்திருக்கேன், நீங்கல்லாம் போட்டிங்கோ கீட்டிங்கோ போயிட்டு வாங்க…! ”

என்று சொல்லி அனைவரையும் அனுப்பினார் ஒரு ஆக்டோஜெனேரியன்.

ஏகாந்தமாக ஓர் பெஞ்சில் வந்து அமர்ந்தார் அவர்.

That is no country for old men. The young In one another’s arms…

…………………………..,

An aged man is but a paltry thing, A tattered coat upon a stick…..

உச்சரித்துக்கொண்டேச் சென்றது ஒரு கல்லூரி ஜோடி.

‘ஒரு வேளை என்னையும்அந்த முதியவரையும் பார்த்தப்பின்தான் இந்த வரிகள் அவர்களுக்கு நினைவு வந்திருக்குமோ?’

அந்த ஜோடிக்கிளிகள், WB ஏட்ஸ் அவர்களின் ‘Sailing to Byzantium’ என்ற தத்துவார்த்தமான கவிதையை, பற்றி உலர்ந்த முதியவரோடு இணைத்து பேசியபடிச் சென்றார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கிறவர்கள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது அவர்களின் உரையாடலில்.

அந்த நானோஜெனேரியனும் தனக்குள் சிரித்துக்கொண்டதைப் பார்த்தேன்,

அவரும், அந்தக் கவிதையின் ஆழத்தை அறிந்தவராய்த் தெரிந்தது.

சற்றே திரும்பிப் பார்த்தால் இன்னொரு ஜோடி.

ஒருவரை ஒருவர் ஆரத் தழுவியபடி, புதர் மறைவில் இலை மறைக் காயாய்.

Representational Image

விடுமுறை நாளென்பதால் கூட்டம் சற்று அதிகம்தான்.

“படகுப் பதிவுக்குப் ‘போட்டாப் போட்டி’யா இருக்கே?”

எவரோ வார்த்தைகளால் சலிப்பை வெளிப்படுத்தினார்கள்.

அப்படிச் சொல்லாதே, “போட்டு போட்டி’னு சொல்லு..”

அறுவை ஜோக்கடித்தார் ஒருவர்.

அங்கிருந்த இறுக்கமானச் சூழலில் இந்த மொக்கை ஜோக் எடுபடவில்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என வித்தியாசமானக் குரல்களோடும், உரையாடல்களோடும் பிஸியாக இருந்தது படகுத்துறை

விசைப்படகு, துடுப்புப் படகு எல்லாமே “ஃபுல்’

சவாரிக்கு ‘வெயிட்டிங் லிஸ்டி’ல் இருந்தது கூட்டம்.

“கூட்டம் அதிகமா இருக்குனு, சும்மா ஒண்ணுரெண்டு வாய்க்காலை மட்டும் காட்டிப்புட்டுத் திருப்பிடாதீங்க. வாங்கற காசுக்கு மொத்தத்தையும் சுத்திக் காட்டுங்க…!” ஒருவர் சட்டம் பேசினார்.

“படகுச் சவாரிக்கு டிக்கெட் வாங்கியவர்கள், கடற்படை வீரர்கள் போல, தற்காப்பு ஜாக்கெட் அணிந்துகொண்டு படகில் ஏறியமர்ந்தார்கள்.

படகில் ஏறும்போது படகு நீரில் அமிழ்ந்து ஆட, பயத்தாலும், ஜாலியாகவும் போட்டார்கள் கூச்சல்.

அரட்டையும் கும்மாலமுமாய், பாட்டும் கூத்துமாய் ‘என்ஜாய்’ செய்தார்கள்.

“மச்சீ…! நீங்க அந்த ‘டியூயல் போட்’ ல ஏறி ‘லைஃப்பை’ என்ஜாய் பண்ணப்ப்போறேனு பாத்தா, எங்ககூட வர்றியே..?”

ஒரு விடலைக் கேட்க, மற்றவர்கள் ‘ஹோ’வெனச் சிரிக்கச், சற்றே அருகாமையில் பெண்குட்டிகள் மட்டும் ஏறிப் பயணிக்கும் படகில் இருந்த அவளும் இங்கே நோக்கினான்.

“அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் இருவர் கண்களும் மாறிக் புக்கு…” என்று ஒருவன் கம்பராமாயணத்தால் கலாய்த்தாள் ஒரு தோழி,

கலகலவென்ற பெரும் சிரிப்புடன் புறப்பட்டன, பெரிய இரண்டு படகுகளும்.”

“ரெண்டு போட்டும் ஒண்ணா போகட்டுண்ணே…!”

ஒருவன் சொல்ல மற்றவர்கள் அனைவரும் ஹோ வென்று குஷியாகக் கத்தினார்கள்.

Boating

“அதுதான் நம்ப ‘போட்டு’

எனக்குக் காட்டினாள் என் கஸின்.

“ஓ? ‘எனக்கேப் Boat காட்டுறியா?”

நான் கலாய்த்தேன்.

கொல்’லென்ற சிரிப்புடன் ஒவ்வொருவராக ஏறினோம்.

12 பேரும். படகில் ஏறி உட்கார்ந்தவுடன் படகோட்டி விவரமாகச் சொன்னார்.

“பிச்சாவரம் சுற்றுலா மையம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்துலேந்து, சுமார் 16 கிலோமீட்டர் ;

கிள்ளை பேரூராட்சி’ வளாகத்துல அமைஞ்சிருக்கு;

‘பித்தர்புரம்’னுதான் இதுக்குப் பேரு, அது மருவிப் பிச்சாவரம்னு ஆயிருச்சு;

சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் உலகத்துலயே ரெண்டாவது பெரிய சதுப்புநில காடுகள்னு சொல்றாங்க இதை;

முதல் பெரிய மாங்ரோ காடு ‘பிரேசில்’ல இருக்காம்;

கடல் முகத்துவாரத்துல இருக்கற இந்தக் காடுகள்ல இயற்கை மூலிகைத்தாவரங்கள் ஏராளமா இருக்கு;

சுரப்புண்ணை, தில்லை மரம், சங்குச் செடி, பீஞ்சல், பூவரசு, வெண்கண்டல், சிறுகண்டல் னு100-க்கும் மேற்பட்ட மூலிகை ஐட்டங்கள் இருக்குதுன்னா பாருங்களேன்!;

இதில் ‘தில்லை மரம்’ங்கறது சிதம்பரம் நடராஜர் கோவிலோட தல விருட்சமுங்க;

இதெல்லாமே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியா, வனத்துறை பராமரிப்புல இருக்குதுங்க!

‘அடல்ட் முதல் ஆக்டோஜெனேரியன்’வரை விபரங்களைக் கேட்டு ஆச்சரியப்பட்டனர்!

“பேராண்மை, தசாவதாரம், துப்பறிவாளன்… இப்படிப் பலப்பல சினிமா ஷூட்டிங் எடுத்த இடங்களையெல்லாம் காட்டுவீங்கதானே?”

விடலைகள் ஆர்வத்துடன் கேட்டனர்.

“காட்டுவேன் காட்டுவேன். நீங்க செல்பி கூட எடுத்துக்கலாம்…!”

விடலைகளின் மனதறிந்து அவர்களிடம் படகோட்டி பேசினார்,

“ஐலசா…” போட்டும், விசிலடித்தும் மகிழ்ந்தார்கள் அனைவரும்.

ஆந்தராவுல, கோதாவரியாத்துல படகு கவுந்து ஏகப்பட்டப் பேர் பலியான விஷயம் தெரியுமல்லோ?”

எங்களுக்குப் பின்னால் நிரம்பிக்கொண்டிருந்த படகில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“யோவ் யாருய்யாது..? மொதப் போணி சவாரி கௌம்பற நேரத்துல அபசகுனமாப் பேசுறது?”

ஒரு படகுக்காரர் கத்தினார்.

“யோவ். நான் என்ன கற்பனை பண்ணியாச் சொன்னேன். நடந்த விசயத்தை நாங்க பேசினா உங்களுக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது?”

பதிலுக்குக் கத்தினார் பயணி.

“விடுங்க…! என்ஜாய் பண்ண வந்துட்டு இதேல்லாம் என்னப் பேச்சு…!”

சுற்றியிருந்தவர்கள் இருவரையும் வாயடக்கினார்கள்.

திருப்பதியில் திடீரென ‘கோவிந்தா…! கோவிந்தா…!” எனக்கூவல் கிளம்புவதுபோல, ஐலேசா… ஐலேசா… என்று கோஷம் திடீரென எழுந்தது.

படகோட்டி, படகின் விசையை இழுத்தார்.

‘டுப்… டுப்… டுப்… டுப்… டுப்… டுப்… டுப்… டுப்… டுப்… டுப்…”

ஐலேசா கோஷத்துக்குப் பின்னணிணிசைப்போல விசைப்படகின் இஞ்சின் ஓசையெழும்பி, பயணிகளின் சந்தோஷக் கூக்குரலுடன் பின்னிப் பிணைந்தது.

பிச்சாவரம் அலையாத்திக் காடுகள்

எங்கள் படகும் புறப்பட்டது.

தண்ணீரில் கையை நனைத்து மகிழ்ந்தனர் சிலர்.

கையை நனைத்து மற்றவர் மேல் தெளித்துவிட்டுக் கத்தினர் விடலைகள்.

“அறிவிருக்கா…?” என டென்ஷன் ஆனார்கள் சில சீனியர் சிடிசன்கள்.

“நீங்க மட்டும் சின்ன வயசுல எப்படி இருந்தீங்களாம்…?” என்று உரிமையோடு கடிந்து கொண்டார்கள், சீனியர் சிட்டிசன்களின் மனைவிமார்கள்.

சில குழந்தைகள் தாத்தாவின் திட்டலுக்காக பயந்து முகத்தை ‘உர்’ ரென்று வைத்துக் கொண்டார்கள்.

“தாத்தா இப்படித்தாண்டா.. நீ ஜாலியா என்ஜாய் பண்ணு…!” என்று சில பெற்றோர்களும், மாமன்மார்களும் குழந்தைகளைத் தூண்டிவிட்டார்கள்.

சில இடங்களில் குகைபோன்ற பிரதேசங்களில் புகுந்து வந்தது படகு.

“பீ…………………..” விசில் ஓசையும்

“ஆ………………..”

“ஓ………………..”

“ஹோ………………..”

“ஊ…………………” என வாயோசையோடு, “ஹ… ஹ… ஹ… ஹ… ஹ…” என்ற சிரிப்பொலியும் கலந்து ஏரி வளாகம் முழுதும் எதிரொலித்தன.

படகு ஆடியாடிப் போகும்போது பயத்திலும், சந்தோஷத்திலும் இப்படி மாறி மாறிக்குரலெழுப்பினார்கள் பயணிகள்.

செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். இஷ்டத்துக்கு இயற்கையை க்ளிக் செய்தார்கள் சிலர். செல் போனில் பாட்டுக்களை அலறவிட்டார்கள் சிலர்.,

“1975-வது வருஷம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிச்சி, இயக்குநர் ஜெகநாதன் இயக்கிய ‘இதயக்கனி’ சினிமா எடுத்த இடம் இது;

முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் மாறுவேஷத்துல படகுச் சவாரி செய்யற காட்சி படமாக்கப்பட்ட இடம் இதுதான்.”

வயதான அந்த கைடு சொல்ல, மூத்த தலைகள் மட்டும் அதை வாய்பிளந்து கேட்டன.

குகைக்குள் செல்வது போலச் சென்று இன்னொரு இடத்தில் நின்றது படகு.

“மிஷ்கின் இயக்கத்துல 2017 ம் வருஷம் விஷால், பிரசன்னா நடிச்ச துப்பறிவாளன் கிளைமாக்ஸ் ஷூட்டிங் இங்கேதான் எடுத்தாங்க…!”

படகோட்டி முடிக்கக் கூட இல்லை. விசில் சத்தம். கூச்சல், கும்மாளம்.. மாற்றி மாற்றி ஸ்மார்ட்ஃபோனில் செல்ஃபி, வீடியோ என அமர்க்களப்பட்டது படகு.

“செல்போனை ஜாக்கிரைதையா வெச்சிக்கங்க. ரொம்ப ஆழமான பகுதி இது. நிறைய பேர் இதுல செல்போனை இழந்திருக்காங்க…!”

எச்சரித்தார் படகோட்டி.

அடுத்து எஸ் பி ஜெகந்நாதன் இயக்கத்துல வெளியான சூப்பர் ஹிட் மூவி ‘பேராண்மை’ல ஜெயம் ரவி, என்சிசி மாணவிகள் ஐவரை ஆற்றில் நடக்கவைத்துப் பயிற்சிக்கு அழைத்துப்போற காட்சி படமாக்கபட்ட இடம் இதுதான்;

“இந்த இடத்துல ஆழம் கிடையாது” என்றார் படகோட்டி.

“இறங்கலாமா?” என்று குரல்கள் வந்தன.’

“இறக்கத் தடை விதிச்சிருக்காங்க தம்பி…” என்றார் படகோட்டி.

கையில் இருந்த துடுப்புக் கழியால் தரையைத் தொட்டு ஆழம் காட்டினார்.

இதோபாருங்க அந்தக் காட்சி என்று ‘டாப்’பில் பேராண்மை படத்துக் காட்சியைக் காட்டி நிழலும்நிஜமுமாக என்ஜாய் செய்தோம்.

படகு பயணம்

இயக்குநர் பவித்ரன் இயக்கி, சரத்குமார், ரோஜா நடித்த ‘சூரியா’ படத்தின் க்ளமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்ற இடத்தை ரசித்தோம்.

“அந்தக்காட்சியை டாப்பில் போட்டும் பார்த்தோம்.

இப்படி சுவாரசியமாக ‘பட’கு சவாரி செய்தோம்.

கடைசியாக, கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் மாறுபட்ட வேடத்தில் நடித்த தசாவதாரம் திரைப்படத்தின் சூப்பர்ஹிட் பாடலான ‘கல்லைமட்டும் கண்டால்’ பாட்டுக்குக் காட்சி எடுத்த இடம் வந்தது.

படகே கவிழ்ந்துவிடும் அளவுக்கு ஆட்டம் போட்டார்கள் விடலைகள்.

கரையேறும் வரை “கல்லை மட்டும் கண்டால்” பாடல் எல்லார் வாயிலும் புகுந்து புறப்பட்டது.

நாங்கள் போட்டிங் முடிந்து, கரையேறினோம்.

கரைக்கடையில் ‘கோன் ஐஸ்’ சுவைத்தோம்.

கார் பார்க்கிங் திரும்பினோம்., !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.