சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். சில மணி நேரம் நடந்த போராட்டத்திற்கே சென்னை மாநகரம் ஸ்தம்பித்து போனது.
இந்நிலையில், அரசு போக்குவரத்து காலத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமன விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் நல சிறப்பு ஆணையர் வேல்முருகன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர், சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், “வாக்குறுதியை மீறினால் மீண்டும் போராட்டம் நடக்கும். போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.
ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது. வரும் 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்” என்று சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.