இம்பால்: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டு எல்லை நகரமான தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் மோரே நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்களுக்கு எதிராக குக்கி இனக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தங்களுடைய பழங்குடிகள் பிரிவு பட்டியலில் மைத்தேயி இனக்குழுவினரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி மக்களின் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரையிலான மோதல்களில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மைத்தேயி இன மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மைத்தேயி இன மக்கள் அகதிகளாக முகாம்களில் அடைபட்டுள்ளனர்.
இதனிடையே மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. முப்படைகளின் தலைமை தளபதி, ராணுவ தளபதி ஆகியோரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மணிப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தற்போது முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா பல்வேறு தரப்பினரை தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் வன்முறை பாதித்த பகுதிகளையும் அமித்ஷா பார்வையிட்டார். மணிப்பூரின் எல்லையான அதாவது மியான்மர் நாட்டு எல்லையில் உள்ள மோரே நகரில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். அங்கு மைத்தேயி, குக்கி மற்றும் தமிழர்களிடம் நிலைமைகளை கேட்டறிந்தார் அமித்ஷா. மோரே நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். மைத்தேயி இனமக்கள் மீதான தாக்குதலில் தமிழர்களின் 30க்கும் மேற்பட்ட வீடுகளும் மோரேவில் தீக்கிரையாகின. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டிருந்தார். மோரே தமிழ் சங்கத் தலைவர் சேகர், சென்னை வருகை தந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார்.
மோரே சென்ற அமித்ஷா, அங்கும் குக்கி இனக்குழுவின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மாநில, மத்திய அரசுகள் மேற்கொள்ளும் அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதாக குக்கி இனமக்கள் தெரிவித்ததாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.