
மலையாள நடிகர் ஹரீஷ் பெங்கன் மரணம்
மலையாள சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வந்தவர் ஹரீஷ் பெங்கன். மகேஷின்டெ பிரதிகாரம், ஜானே மன், ஜெய ஜெய ஜெய ஹே, ஜோ அண்ட் ஜோ, மின்னல் முரளி உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். 49 வயதான ஹரீஷ் சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இவரது தங்கை கல்லீரல் தானமாக கொடுக்க முன்வந்தார். உறவினர்கள் சிகிச்சைக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஹரீஷ் பெங்கன் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.