ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் புதிய அரசு நியமனங்கள் அனைத்தையும் அம்மாநில அரசு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக இடஒதுக்கீடு கொள்கையை மறு ஆய்வு செய்யவும் ஒரு குழுவை மேகாலயா மாநில அரசு அமைத்துள்ளது.
மணிப்பூர் வன்முறை: நாட்டின் பல மாநிலங்களில் இடஒதுக்கீடு விவகாரம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், பழங்குடிகள் பட்டியலில் மைத்தேயி இன மக்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி, நாகா இனமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் குக்கி இனமக்கள் தீவிரமாக போராட்டத்தில் குதித்தனர். இது மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்து அம்மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு மாத காலமாகியும் மணிப்பூர் வன்முறைகள் ஓயவில்லை. இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். நாட்டின் ராணுவ தளபதிகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மணிப்பூரில் முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது மணிப்பூரை தொடர்ந்து மற்றொரு வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிலும் இடஒதுக்கீடு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேகாலயா மாநிலத்தில் தற்போது காசி-ஜயந்தியா இனத்தவருக்கு 40%; காரோ இனக்குழுவுக்கு 40%; இதர பழங்குடிகளுக்கு 5%; பொது பிரிவினருக்கு 15% என இடஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கிறது. இந்த இடஒதுக்கீடு கொள்கையை மறு ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்பது கோரிக்கை. அதாவது காசி இனக்குழுவினர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் தற்போதைய இடஒதுக்கீட்டு கொள்கையை மறுசீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி விபிபி -VPP கட்சி பொதுச்செயலாளர் Basaiawmoit சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இதனைத் தொடர்ந்து மேகாலயா மாநில அரசு, இடஒதுக்கீடு கொள்கையை மறு ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து புதியதாக எந்த நியமனங்களையும் மேற்கொள்ளவும் மேகாலயா மாநில அரசு தடை விதித்து புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இருந்த போது மேகாலயா மாநில அரசின் இந்த நடவடிக்கைகள் மீது VPP கட்சி இன்னமும் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.