பெர்லின்,
உக்ரைனுக்கு எதிரான போரை ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியபோது, அதற்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அவற்றில் ஜெர்மனியும் ஒன்று. இதனை தொடர்ந்து, ரஷியாவின் எரிவாயு இறக்குமதியை நிறுத்தியது.
ரஷியாவுக்கு எதிரான சர்வதேச தடைக்கு ஆதரவு அளித்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை ரஷியா மீது விதித்தன. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டது.
எனினும், போரானது ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இதன்பின், தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி, ஜெர்மனியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ரஷிய தூதர்களை வெளியேற்றியது.
ரஷியாவும் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த சூழலில், ஜெர்மனியின் நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாக, கடந்த ஏப்ரலில் 20-க்கும் மேற்பட்ட ஜெர்மன் நாட்டு தூதர்களை ரஷியா வெளியேற்றியது.
இதன்பின், ரஷியாவில் பணியாற்றும் ஜெர்மனி அரசு அதிகாரிகளின் உச்சபட்ச எண்ணிக்கையை 350 ஆக ரஷிய அரசு குறைத்தது. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி அரசின் தூதர்கள், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட எண்ணற்றோர் ரஷியாவை விட்டு விரைவில் வெளியேற உள்ளனர்.
ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, ஜெர்மனியில் இயங்கி வரும் 5 ரஷிய தூதரகங்களில் 4 தூதரகங்களை மூடுவது என ஜெர்மனி அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த தகவல், ரஷிய வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டு விட்டது என ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இன்று கூறியுள்ளார். இதனை தி மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகை தெரிவித்து உள்ளது.