விரைவில் விரிவாக பேசலாம்… மேகதாது விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்!

சித்தராமையா தலைமையிலாக காங்கிரஸ் அரசு சமீபத்தில் பதவியேற்றது. இந்நிலையில் கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமா, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவக்குமார், கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மேகதாது அணை மற்றும் மகதாயி திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மேகதாது அணை கட்டுவது தங்களின் உரிமை என்ற அவர் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். டிகே சிவக்குமாரின் பேச்சுக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அமைச்சர் துரைமுருகன் டிகே சிவக்குமாருக்கு அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்ததாக இன்று காலை பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் துரைருகன். தொடர்ந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கும் டிகே சிவகுமாருக்கு நேரில் வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்ததாகவும் இருப்பினும் இந்த அறிக்கையின் மூலம் முதலில் வாழ்த்து தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

சிவக்குமார் பதவிப் பிரமானம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும் மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும் என்றும் துரைமுருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

எனவே தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல என்றும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்றும் அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன் அதுவரை சிவக்குமார் பொறுமை காப்பார் என நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.