செல்லுபடியாகும் வீசாக் காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து வீசாக் கட்டணத்துக்கு மேலதிகமாக மிகைத்தங்கியிருப்புக் காலத்துக்கு அறவிடப்படும் 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை திருத்துவதற்கான குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய இந்த ஒழுங்குவிதிகள் மூலம் வீசாக் காலப்பகுதியை நீடித்துக் கொள்ளாமல் செல்லுபடியாகும் வீசாக் காலம் முடிவடைந்து 07 நாட்கள் அல்லது அதற்கு குறைந்த காலத்தில் வெளியேறும் போது அதற்காக தண்டப்பணத்தை அறவிடாமல் இருப்பதற்கும் மிகை தங்கியிருப்புக் காலம் 7 நாட்களுக்கு மேல் மற்றும் 14 நாட்கள் அல்லது அதற்கு குறைவான காலப்பகுதிக்கு 250 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை அறவிடுவதற்கும் மிகை தங்கியிருப்புக் காலம் 14 நாட்களை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை அறவிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையின் மேம்பாடு முதலீட்டாளர்களை கவர்வது மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் மேற்குறிப்பிட்ட தண்டப்பணத்தை செலுத்த வேண்டும் என்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த ஒழுங்குவிதிகள் எதிர்வரும் தினமொன்றில் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்படவுள்ளது.
அதற்கு மேலதிகமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் வெவ்வேறு இடங்கள் மற்றும் தனி நபர்களின் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பொலிஸ் நிலையங்களில் அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார். இந்த நடைமுறை நீண்டகாலமாக இருந்து வருவதாகவும் சரியான பாதுகாப்பு மதிப்பீடொன்றை மேற்கொண்டு அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி ஏனைய அதிகாரிகளை பொலிஸ் நிலையங்களில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் டிரான் அலஸ் ஆலோசனை வழங்கினார்.
இதேவேளை போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகள் தொடர்பில் ஈடுபடும் அதிகாரிகளை பாராட்டுவதற்கான நடவடிக்கையின் தேவை குறித்து உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக் கொண்டுவனந்தனர். அதற்கமைய ஒவ்வோர் பொலிஸ் பிராந்தியங்களில் இருந்தும் போதைப்பொருள் சுற்றி வளைப்புகள் தொடர்பான பரிந்துரைகளை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பாராட்டுவதற்காக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.