“ஹை அலர்ட்”.. ஆட்டம் காட்டும் அரிசி கொம்பன்! 191 வனத்துறையினர் -3 கும்கி யானைகள்! புல் போர்சில் அரசு

சென்னை: தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள், 191 வனத்துறை அலுவலர்களும் இறங்கி இருப்பதாக வனத்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், “மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றம், ஆணையின்படி 35 வயது ஆண் யானையான “அரிகொம்பன்” ஐ பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கோள வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து இந்த யானையை கடந்த ஏப்ரல் 29ம் தேதி பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் கேரள தமிழக எல்லையில் விடுவித்தனர்.

“அரிக்கொம்பன்” காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு பல துறைகளுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் கள இயக்குநர் மற்றும் தலைமை வனப் பாதுகாவலர் மேகமலை புலிகள் காப்பகம் அவர்களின் தலைமையில் மேகமலை கோட்டத்தின் துணை இயக்குநர், தேனி மாவட்ட வன அலுவலர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட துணை இயக்குனர்; மேகமலை கோட்டத்தின் உதவி வனப் பாதுகாவலர் மற்றும் துணை வனப் பாதுகாவவர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.

மதுரை வனப் பாதுகாப்புப் படையின் மூலம் வனப்பகுதிக்குள் யானைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மேகமலை புலிகள் காப்பகத்தின் உள்ளூர் கண்காணிப்பாளர்கள் உட்பட முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த 16 யானைத்தட கண்காணிப்புக் காவலர்கள் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து ‘சுயம்பு’ மற்றும் ‘முத்து’ மற்றும் முதுமலை யானைகள் முகாமில் இருந்து ‘உதயன்’ ஆகிய 3 கும்கி யானைகள் சம்பவ இடத்துக்கு வந்து மேற்படி நடவடிக்கைகளுக்கு துணை நிற்கின்றன. யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இரண்டு பிரிவுகளாக செயல்பட கள இயக்குநர், ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் அவர்கள் நான்கு முக்கிய குழுக்களை அமைத்துள்ளார்.

தளவாடங்கள், கும்கிகளைக் கையாளுதல், தரவுகளைத் திரட்டுதல் மற்றும் இதர தேவைகளுக்குத் தனிக் குழுக்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. மின்சாரம் தாக்காமல் இருக்க, யானைகள் பாதுகாப்பாக செல்வதை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிரத்யேக குழு கண்காணித்து வருகிறது.

191 forest officials and 3 Kumki elephants involved in capture Arisi Komban elephant - Tamilnadu forest department

ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக கம்பம் வன சரக அலுவலக வளாகத்தில் மத்திய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 160 வனத்துறை அலுவலர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஓசூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 31 வனத்துறையினரும் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கம்பம் நகராட்சி பகுதியில் 144 தடை உத்தரவு மூலம் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது. தேனி மாவட்ட ஆட்சியர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். யானையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.