சான் பிரான்சிஸ்கோ: 10 நாட்கள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அம்மாநில முதல் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும், வரவிருக்கும் தேர்தலை இருவர் தலைமையிலும் காங்கிரஸ் சந்திப்பது என்றும் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த ஆலோசனை முடிந்தபின் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ளார் ராகுல். அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய அவரை காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளும் சாம் பிட்ரோடா வரவேற்றார். இந்தியாவின் தொலைத்தொடர்பு புரட்சியின் தந்தை எனப் போற்றப்படுபவர் பிட்ரோடா.
இந்த 10 நாள் சுற்றுப்பயணத்தில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் ராகுல் உரையாட உள்ளார். இதுதவிர வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தவும் உள்ளார். ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க்கில் ஒரு பொதுக் கூட்டம் மாதிரியான மக்கள் சந்திப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை முடித்துக்கொண்டு மீண்டும் நாடு திரும்புகிறார்.