8 மாதமாக காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சின்னத்திரை இணையரின் திருமண வாழ்க்கை பகீர் குற்றச்சாட்டுகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.
சின்னத்திரை சீரியல்கள், குறும்படங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர்கள் விஷ்ணுகாந்த், சம்யுக்தா. இவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளங்களும் உள்ளன.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் சேர்ந்து நடித்த விஷ்ணுகாந்தும் சம்யுக்தாவும் காதலில் விழுந்தனர். இந்த காதலை இருவரும் யூடியூப்பில் நிகழ்ச்சியாகவும் நடத்தி அறிவித்தனர்.
காதல் ஜோடிகள் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்துக் கொண்டனர். இந்த திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறி இருவரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
விஷ்ணுகாந்த் உடனான திருமண வாழ்க்கை ஏன் முடிவுக்கு வந்தது என விளக்கமளித்த சம்யுக்தா, திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு நாளும் தனக்கு உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்தார்.
சம்யுக்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து விஷ்ணுகாந்த் அளித்துள்ள விளக்கத்தில், ஒருவரை நம்பி தனது திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாள்களுக்குள் நரக வாழ்க்கையை வாழ்ந்ததாகவும், பொய்யான நரக வாழ்க்கையில் இருந்து தன்னை காப்பாற்றிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகும் தனது முன்னாள் காதலனுடன் சம்யுக்தா பேசி வந்ததாகவும் ஆடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் விஷ்ணுகாந்த். சின்னத்திரையில் மின்னிய நட்சத்திரங்களின் வாழ்க்கை. விளக்கு வெளிச்சத்தில் விழுந்த விட்டில் பூச்சியாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர், திரையுலகினர்.