மும்பை: அதிக பட்ஜெட்டில் உருவான அமீர்கானின் கடைசி இரண்டு படங்களும் படு தோல்வியை சந்தித்த நிலையில், நடிப்புக்கு சிறிய இடைவேளை விட்டுள்ளார் அமீர்கான்.
இந்நிலையில், சினிமா விழா ஒன்றில் கலந்துக் கொண்ட அமீர்கான் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது சமூக வலைதளங்கள் எனக்கானது அல்ல என நினைக்கிறேன் என்றார்.
மேலும், தற்போது குடும்பத்துடன் தான் நேரத்தை செலவிட்டு வருகிறேன் என்றும் எந்தவொரு படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்றும் கூறி உள்ளார்.
அடிவாங்கிய அமீர்கான்: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் கலக்கி வந்த அமீர்கான் கஜினி, தூம் 3, பிகே, தங்கல் உள்ளிட்ட படங்கள் மூலமாக மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தினார்.
ஆனால், கடைசியாக அவர் தயாரித்து நடித்த தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் மற்றும் லால் சிங் சத்தா படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், சினிமாவில் இருந்தே விலக முடிவெடுத்து விட்டார் அமீர் கான்.
விவாகரத்து சர்ச்சை: நடிகர் அமீர்கான் சினிமாவில் சறுக்கல்களை சந்தித்ததை போலவே தனது சொந்த வாழ்க்கையிலும் சறுக்கலை சந்திக்க ஆரம்பித்தார். 2வது மனைவியுடன் 15 ஆண்டுகளுக்கு மேல் குடும்பம் நடத்தி வந்த அமீர்கான் அவரை விவாகரத்து செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், 3வதாக 31வயது நடிகை ஃபாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என கிசுகிசுக்கள் கிளம்பின. கடந்த வாரம் ஃபாத்திமாவுடன் அமீர்கான் விளையாடிய வீடியோ காட்சிகளும் வெளியாகின.
KRK எனும் பாலிவுட் விமர்சகர் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிரடியாக ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பினார்.
எமோஷனலாக ரெடியாகவில்லை: இந்நிலையில், சோனம் பஜ்வா நடிப்பில் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாக உள்ள Carry On Jatta 3 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமீர்கானிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது சமூக வலைதளங்களில் நான் பெரிதாக எப்போதுமே ஆர்வம் காட்டியதில்லை. அவை எனக்கானது இல்லை என்றே நினைக்கிறேன் என்றார். மேலும், அடுத்த படம் பண்ணுவது பற்றி இதுவரைக்கும் நான் எமோஷனலாக தயாராகவில்லை. இப்போதைக்கு என் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளேன் என்றார்.