சான் பிரான்சிஸ்கோ: பார்லிமென்டில், செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட் எனக்கூறியுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல், உண்மையான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே செங்கோல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் எனக்கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் ஸ்டான்போர்டு பல்கலையில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.
அதிகரிப்பு
அப்போது ராகுல் பேசியதாவது: மக்களை அச்சுறுத்தி வரும் பா.ஜ., விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டிய அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.,வும் ஆர்எஸ்எஸ்., அமைப்பும் கட்டுப்படுத்துவதால், பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ள வேண்டிய அவசியம் வந்தது. இந்த யாத்திரையை நிறுத்த மத்திய அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது.
ஆனால், எதுவும் பலன் அளிக்காததால், யாத்திரையின் தாக்கம் அதிகரித்தது. ‛ இந்தியாவுடன் சேர வேண்டும்’ என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் ஏற்பட்டதே இதற்கு காரணம். பாசம்,மரியாதை மற்றும் பணிவு ஆகிய உணர்வை மையமாக வைத்து பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்பட்டது. வரலாற்றை படிக்கும்போது, ஆன்மிக குருக்களான குருநானக், பசவண்ணா, நாராயண குரு ஆகியோர் இதனைப் போன்றே நாட்டை ஒற்றுமைபடுத்தினர்.
தயார் இல்லை
இந்தியாவில், சிலர், தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்ற நினைப்பில் உள்ளனர். வரலாற்று அறிஞர்களிடம் வரலாறு குறித்தும், விஞ்ஞானிகளிடம் அறிவியல் குறித்தும் தங்களால் விளக்க முடியும் என நினைக்கின்றனர். அவர்கள், கடவுள் அருகில் அமர்ந்தால், பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து விளக்குவார்கள்.
இதற்கு பிரதமர் மோடி ஒரு உதாரணம். மோடி கடவுள் அருகில் அமரும் போது, பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து விளக்க துவங்குவார். இதனால், நான் என்ன படைத்தேன் என்பது குறித்து கடவுளே குழம்பிவிடுவார்.அவர்கள் எதையும் கேட்கத்தயாராக இல்லை.
முக்கியம்
எந்த பிராந்திய மொழிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. எந்த மொழி மீதும் தாக்குதல் நடத்துவது, அது இந்தியா மீதான தாக்குதலுக்கு சமம். தாங்கள் தாக்கப்படுவதாக இஸ்லாமியர்கள் நினைக்கின்றனர்.
அதேபோன்றே, சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்களும் நினைக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு இன்று இந்தியாவில் என்ன நடக்கிறதோ, அது 1980 களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நடந்தது. ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது முக்கியம். ஆனால், இதற்கு பா.ஜ., அனுமதிக்காது. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் சமமாக நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதனை செய்வோம். அனைவரும் சமமாகவும், நேர்மையாகவும் வாழ்வதற்கான நாடாக இந்தியாவை மாற்றுவோம்.
திசை திருப்பல்
வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வெறுப்புணர்வு பரப்புதல் ஆகிய பிரச்னைகளை தீர்க்க பிரதமராலும், அவரது அரசாலும் முடியாது. உண்மையான பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியாததால், புதிய பார்லிமென்ட் மற்றும் செங்கோல் விஷயத்தை கையில் எடுத்துள்ளனர்.
பார்லிமென்டில், செங்கோல் முன்னே பிரதமர் மோடி விழுந் கும்பிட்டுள்ளார். இது அவர் செய்த ஸ்டண்ட். ஆனால் அப்படி நான் விழுந்து வணங்க மாட்டேன். நான் அப்படி செய்யாதது உங்களுக்கு மகிழ்ச்சியா இல்லையா.
பெருமை
அமெரிக்காவில் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்தியராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை அமெரிக்கர்களுக்கு காட்டியதற்காக புலம்பெயர்ந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வளர்ச்சிக்கு, இந்தியர்களின் பங்களிப்பை அமெரிக்கர்கள் பாராட்டும்போது, அது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்