சியோல், வட கொரியா தன் ராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்திய உளவு செயற்கைகோள், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது.
கிழக்காசிய நாடான வடகொரியா, அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் தொடர்ந்து மோதல் போக்குடன் உள்ளது.
ஐ.நா., உட்பட எந்த ஒரு சர்வதேச அமைப்பின் கட்டுப்பாடுகளையும் வடகொரியா பொருட்படுத்துவதில்லை.
இந்நாடு, அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில், தொடர்ந்து பல அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதனை செய்தது.
தற்போதைய நிலையில், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களையும் தாக்கக் கூடிய ஏவுகணைகள் வடகொரியாவிடம் உள்ளன.
இந்நிலையில், தன் ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், உளவு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் வடகொரியா இறங்கியது. ஐ.நா.,வின் தடையை மீறி இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதன்படி, ‘மாலிங்க்யாங் – 1’ என்ற செயற்கைகோள், ‘சோலிமா – 1’ என்ற ராக்கெட் வாயிலாக நேற்று காலை புறப்பட்டது.
ஆனால், தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, சில நிமிடங்களிலேயே அந்த ராக்கெட் வெடித்துச் சிதறியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் பாகங்கள் கடலில் விழுந்தன.
வழக்கமாக தன் முயற்சிகள் தோல்வியடையும்போது, அது குறித்து வடகொரியா எந்த கருத்தையும் தெரிவிக்காது. ஆனால், முதல் முறையாக, செயற்கைகோள் அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக வடகொரியா ஒப்புக் கொண்டது.
‘தவறுகள் தெரிந்துவிட்டதால், அவை சரிசெய்யப்பட்டு, புதிய செயற்கைகோள் விரைவில் அனுப்பப்படும்’ என, வடகொரியா கூறியுள்ளது.
இந்த செயற்கைகோள் முயற்சி தோல்வியடைந்ததால், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை சீண்டும் வகையிலான நடவடிக்கைகளில் வடகொரியா இறங்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்