சீமான் உள்ளிட்ட நா.த.க நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்திக், பாக்கியராசன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கின்றன.
சேலம் வீட்டுக்குத் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி!
முழங்கால் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் சென்றுவிட்டு மீண்டும் சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள வீட்டுக்குத் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.
”தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன்!” – ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அரசியலமைப்பில் இருக்கிறது. அந்த எண்ணத்தைச் சிதைக்க நினைக்கிறது பா.ஜ.க. தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் என்பது ஒரு மொழி என்பதைத் தாண்டி, அது அவர்களின் கலாசாரம், வரலாறு, வாழ்வியல் முறையாக இருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். தமிழ்மீது தாக்குதல் நடத்துவது, இந்தியாமீது தாக்குதல் நடத்துவதற்குச் சமம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
“குற்றத்தை நிரூபித்தால் நானே தூக்கிட்டுக்கொள்கிறேன்!” – பிரிஜ் பூஷண் சரண் சிங்
மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங், “என்மீது வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்கூட நானே தூக்கிட்டுக்கொள்கிறேன். நீதிமன்றத்தில் ஆதாரத்தைக் கொடுங்கள், என்ன தண்டனையை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்!
உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “பாலியல் புகார்மீது நடவடிக்கை எடுக்கப் போராடும் இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும்விதம் கண்டனத்துக்குரியது. புகார்மீது எந்த முடிவும் எட்டப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறது.
“ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு” – ஸ்டாலின்
தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதில்,“பத்தாண்டுக்கால இருட்டை ஒவ்வொரு பகுதியாக விரட்டி, விடியலைத் தந்துகொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. இன்னும் சில பகுதிகளில் இருட்டு ஒளிந்துகொண்டிருக்கிறது. அதையும் விரட்டி, ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
“இது தொடர்பாக அரசு பதிலளிக்காதது வெட்கக்கேடானது” – பா.இரஞ்சித்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பதிவில், “ உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மூவர்ணக்கொடியை ஏற்றிய சாம்பியன்கள் எந்தவிதமான கண்ணியமும், மரியாதையும் இல்லாமல் நடத்தப்பட்டிருக்கின்றனர். வெற்றியாளர்கள் தங்கள் பதக்கங்களை ஆற்றில் வீசும் முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக அரசு பதிலளிக்காதது வெட்கக்கேடானது. மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கைப் பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
“மோடி அரசே, நீதியைக் கொல்லாதே” – திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “காமப்பித்து வன்கொடுமைகளைச் செய்த பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கைக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்களின் உறுதிமிக்க அறப்போர் வெல்லட்டும். மோடி அரசே, நீதியைக் கொல்லாதே… குற்றஞ்சாட்டப்படும் நபரைப் பாதுகாத்திட முயலாதே” எனப் பதிவிட்டிருக்கிறார்.
தென்காசி: டாஸ்மாக் பாரில் திருட்டு!
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் சாலையில் டாஸ்மாக் பார் செயல்பட்டுவருகிறது. அந்தக் கடைக்குள் நேற்றிரவு நுழைந்த மர்மநபர்கள் சிசிடிவி கேமராவை அடித்து உடைத்துவிட்டுக் கடையில் இருந்த 58,000 ரூபாய் ரொக்கம், பொருள்களைத் திருடிச் சென்றிருக்கின்றனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, தமிழகம் திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் கடந்த 23-ம் தேதி ஒன்பது நாள் பயணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அதிகாரிகள் உடன் சென்றனர்.
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில், தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஒன்பது நாள்கள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு 10 மணியளவில் தமிழகம் திரும்புகிறார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டிருக்கின்றனர்.