ஜம்மு, ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில், பயங்கர ஆயுதங்கள் மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளுடன் ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.
ஜம்மு – காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கர்மாரா அருகே, நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நம் அண்டை நாடான பாக்., எல்லையிலிருந்து பயங்கரவாத கும்பல் ஒன்று ஊடுருவ முயற்சித்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி சுட்டனர். பதில் தாக்குதல் நடத்திய அவர்கள் இருளில் தப்பியோடினர்.
உள்ளூர் போலீசார் உதவியுடன் அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், அங்கு பதுங்கி இருந்த மூன்று பயங்கரவாதிகளை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 10 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே., ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஹெராயின்’ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது:
மோசமான வானிலை மற்றும் கனமழையை சாதகமாக பயன்படுத்தி, நம் எல்லைப்பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர்.
இதை, நம் ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இவர்கள் கர்மாரா பகுதியைச் சேர்ந்த முஹமது பரூக், 26, முஹமது ரியாஸ், 23, முஹமது ஜுபைர், 22, என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள், பாக்., பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை வாங்கி நம் பகுதிக்கு எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
இச்சம்பவத்தை யடுத்து, கர்மாரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுஉள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்