
அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்காவிற்கு 'பாகுபலி 1, 2, மற்றும் பாகமதி' ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. ஆனாலும், அதன்பின் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'நிசப்தம், சைலன்ஸ்' படம் வரவேற்பைத் தரவில்லை. அந்தப் படம் வெளிவந்து இரண்டரை வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அதன்பின் அவர் அதிகப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவேயில்லை.
தெலுங்கில் மட்டும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார். மகேஷ்பாபு இயக்கியுள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைக்க, நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழிலும் இப்படம் வெளியாக உள்ளது.
தெலுங்கில் இப்படத்திற்காக நடிகர் தனுஷ் 'ஹதவிடி' என்ற பாடலைப் பாடியுள்ளார். அப்பாடலை சற்று முன் யு டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். தனுஷ் பாடும் பாடல்கள் தமிழில் எப்படியாவது ஹிட்டாகிவிடும். தெலுங்கில் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடியுள்ளார்.