வாஷிங்டன்: கடன் உச்சவரம்பை உயர்த்தும் திருத்த மசோதா மக்களுக்கான நல்ல செய்தி என்றும், செனட் சபையில் இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும், அரசின் நிதி கருவூலகம் முற்றிலுமாக தீரும் நிலையில் உள்ளதாகவும் ஊடகங்கள் சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், அரசின் சுமையை குறைக்க கடன் உச்சவரம்பை உயர்த்த வழிவகுக்கும் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் குடியரசு, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செனட் சபை (மக்களைவை)-க்கு இந்த மசோதா நாளை கொண்டுவரப்படுகிறது.
இந்த நிலையில், இம்மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியதை அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இது அமெரிக்காவுக்கும், அமெரிக்க மக்களுக்கும் நல்ல செய்தி. ஆனால், செனட் சபை இதனை நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு நிறைவேறும்பட்சத்தில் வரும் 5-ஆம் தேதி மசோதாவை சட்டபூர்வமாக அங்கீகரித்து கையெழுத்திட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடன் உச்சவரம்பை உயர்த்தும் மசோதா சட்டமானால் நிதி நெருக்கடியில் உள்ள அமெரிக்க அரசின் சுமைகள் குறைக்கப்படும் என்றும், இதன் மூலம் அடிப்படை திட்டங்களை அரசு விரிவுப்படுத்தும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.